சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

நாங்கள் யார்

+
எம்மைப் பற்றி

வத்திக்கான் வானொலி திருப்பீடத்தின் ஒலிபரப்பு நிலையம். இது வத்திக்கான் நகர நாட்டுக்குள் முறைப்படி அமைந்திருக்கின்றது. சர்வதேச சமுதாயத்தால் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. திருத்தந்தையின் திருப்பணிக்குச் சேவை செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. வானொலியை வடிவமைத்த குல்யெல்மோ மார்க்கோனி என்பவரால் அமைக்கப்பட்டு, திருத்தந்தை பதினோராம் பத்திநாதரால் 1931ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இவ்வானொலி இயேசு சபையினரால் நடத்தப்படுகின்றது.
கிறிஸ்துவின் நற்செய்தியைச் சுதந்திரமாகவும், பிரமாணிக்கத்துடனும் திறமையுடனும் அறிவிப்பதே வத்திக்கான் வானொலியின் முக்கியப் பணியாகும்.

  • திருத்தந்தையின் உரைகளையும், எண்ணங்களையும் பரப்புதல்,
  • திருப்பீடத்தின் நடவடிக்கைகளை அறிவித்தல்,
  • உலகில் கத்தோலிக்கத் திருச்சபையின் வாழ்வு மற்றும் நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை வழங்குதல்,
  • விசுவாசிகள், திருச்சபை படிப்பினைகளின் ஒளியில், இக்காலத்தின் பிரச்சனைகளைச் சீர்தூக்கிப் பார்ப்பதற்கு உதவுதல் போன்ற பணிகள் மூலம், கத்தோலிக்க மையத்திற்கும் பல்வேறு நாடுகளுக்கும் இடையேயான தொடர்பை வளப்படுத்துகிறது இவ்வானொலி.

வத்திக்கான் வானொலி, உலகின் மறைமாவட்டங்கள் அல்லது ஆயர்கள் பேரவைகளுக்கு வானொலி ஒலிபரப்புத் துறையில் ஆலோசனைகளையும் ஒத்துழைப்பையும் வழங்குகிறது.

திருத்தந்தையின் அனைத்து அதிகாரப்பூர்வ வத்திக்கான் செயல்பாடுகளை ஒலிப்பதிவு செய்தல், அவற்றை ஒலிபரப்புதல், அந்த ஒலிப்பதிவுகளை விநியோகித்தல் ஆகிய நிர்வாக ரீதியானப் பணிகளை ஆற்றி வருகிறது. அத்துடன், உரோமைய கத்தோலிக்கத் திருத்தந்தையரின் குரல்களுக்கான ஒலிப்பதிவு உரிமங்களையும் அறிவுச் சொத்துக்களையும் தனிப்பட்ட விதத்தில் கொண்டு அவற்றைப் பாதுகாத்து செயல்படுத்தும் பொறுப்பையும் கொண்டுள்ளது.

வத்திக்கான் வானொலி, திருச்சபை மற்றும் மதம் சார்ந்த செய்திகளை வழங்குகின்றது. இத்தகையச் செய்திகளை பிற தொடர்பு ஊடகங்களில் கேட்க முடியாது. முதலில் இவ்வானொலி, திருத்தந்தையும் திருப்பீடமும் நடத்தும் நிகழ்ச்சிகளையும், அவர்களின் செயல்பாடுகளையும் அறிவிக்கின்றது. சமயச் சூழலில் அரசியல், சமூக, பொருளாதார விவகாரங்களைத் தருவதோடு, மக்கள் அவற்றில், காலத்தின் அறிகுறிகளைப் பார்த்து, விசுவாச ஒளியில் அவர்கள் செயல்படுவதற்கு ஊக்குவிக்கிறது.

சமயச் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்ட அல்லது அதிக மக்கள் தொடர்பு வசதிகள் இல்லாத இடங்களில் வாழ்கின்றவர்கள் தங்களின் ஆன்மீக தாகத்தைத் தணித்துக் கொள்ளவும், வழிபாடுகளில் கலந்து கொள்ளவும் திருவழிபாட்டு நிகழ்ச்சிகள் வழியாக உதவுகின்றது வத்திக்கான் வானொலி. இன்னும் சொல்லப்போனால், புனித பேதுருவின் வழித்தோன்றலான திருத்தந்தையுடன் திருச்சபையின் ஒன்றிப்பை ஆழப்படுத்துவதற்கென திருத்தந்தை தலைமையேற்று நடத்தும் நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகின்றது.

வத்திக்கான் வானொலியின் பெரும்பாலான நிகழ்ச்சிகள் கிறிஸ்தவ வாழ்வின் பல்வேறு கூறுகளுக்கென ஒதுக்கப்பட்டிருந்தாலும், மனித சமுதாயம் மத நல்லிணக்கத்துடனும் ஒத்துழைப்புடனும் வாழ உதவியாக கிறிஸ்தவ ஒன்றிப்பு மற்றும் பல்சமய உரையாடலிலும் தனிப்பட்ட கவனம் செலுத்தப்படுகின்றது. மேலும், இந்நிகழ்ச்சிகளில் திருச்சபையின் நீண்டகாலப் பாரம்பரியத்திற்கு ஒத்திணங்கும் வகையில், கலாச்சாரம், கலை, சிறப்பாக இசை போன்றவைகளுக்கும் போதுமான கவனம் செலுத்தப்படுகின்றது.

இயேசு சபையைச் சார்ந்த அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி சே.ச., 2005ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதியிலிருந்து வத்திக்கான் வானொலி இயக்குனராக இருக்கிறார்.

+
வத்திக்கான் வானொலியும் பன்னாட்டு நிறுவனங்களும்

வ‌த்திக்கான் வானொலி EBU (European Broadcasting Union) என்ற அமைப்பை உருவாக்கி, அதன் ஓர் அங்கமாய் விளங்குகிறது. மேலும், UAR (Union Africaine de Radiodiffusion) என்பதன் ஓர் அங்கமாகவும், உலக கத்தோலிக்க சமூகத்தொடர்பு அமைப்பான SIGNIS, கிறிஸ்தவ வானொலிகளின் ஐரோப்பிய அவையான‌ CERC, இத்தாலிய வானொலி மற்றும் தொலைக்காட்சி கூட்டமைப்புகளின் அங்கமாகவும் உள்ளது.

ஒலிபரப்புத்துறையைப் பொறுத்தவரையில் அனைத்துலக தொலை தொடர்பு ஒன்றியம் ITU (International Telecommunication Union), ஐரோப்பிய தபால் மற்றும் தொலைத்தொடர்பு நிர்வாகங்கள் அவை CEPT (European Conference of Postal and Telecommunications Administrations), சர்வதேசத் தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் நிறுவனம் ITSO (International Telecommunications Satellite Organization) ஆகியவைகளில் வத்திக்கான் நாட்டின் பிரதிநிதியாக வத்திக்கான் வானொலி உள்ளது.

+
எமது தமிழ் தினசரி நிகழ்ச்சிகள்

இறையுணர்வு, அனைத்துலக அமைதி, மனித மாண்பு, சமய உரிமை - இவைகளுக்கு அழைப்பு விடுக்கும் திருத்தந்தையின் பொன் மொழிகள்.
விவிலியக் கருத்து வளங்களை உணர்த்தும் விவிலியத் தேடல்கள், ஞாயிறு திருப்பலிக்கு நேயர்களைத் தயாரிக்கும் நோக்கிலான ஞாயிறு வாசகங்களை மையமாகக் கொண்ட ஞாயிறு சிந்தனைகள், சமூக அவலங்களைச் சாடி, சமுதாய விழிப்புணர்வுக்குப் பாதை காட்டும் குறு நாடகங்கள், உலக நிகழ்வுகளை உரசிப் பார்க்கும் வாரம் ஓர் அலசல், பல ஆன்றோர், பெரியோரின் வாழ்க்கை அனுபவப் பரிமாற்றங்கள், சாதனைகளை அறியத் தரும் நேர்காணல்கள், திருத்தந்தையின் சுற்றுமடல்கள், செய்திகள் பற்றிய வல்லுனர்களின் அலசல்கள், வானொலி அலையால் பிணைக்கப்பட்டிருக்கும் அன்புள்ளங்களின் கருத்துப் பரிமாற்றங்களை அறியாமல் நிகழ்ச்சி சிறப்புற அமையாது என்பதை உணர்த்தும் அஞ்சல் பெட்டி என நாளுக்கு நாள் பல்சுவையூட்டும் நம் நிகழ்ச்சிகள் ஒவ்வொரு நாளும் மூன்று முறை ஒலிபரப்பாகின்றன.
வானொலி தவிர இணைய வலைத் தொடர்பு (internet) அமைப்பிலும் நிகழ்ச்சிகளைக் கேட்க முடியும்.

அன்றாடக் காலை நிகழ்ச்சிகள்:
வாரத்தின் ஒவ்வொரு நாளும் காலை நாங்கள் ஒலிபரப்பும் நிகழ்ச்சிகள் இவை:
ஞாயிறு: ஞாயிறு சிந்தனை
திங்கள்: பல்சுவை, அஞ்சல் பெட்டி
செவ்வாய்: வாரம் ஓர் அலசல்
புதன்: விவிலியத் தேடல்
வியாழன்: புதன் பொது மறை போதகம், திருச்சபையில் திருப்புமுனைகள்
வெள்ளி: நேர் காணல்
சனி: நாடகம்

இவையன்றி, வாரத்தின் ஒவ்வொரு நாளும் (ஞாயிறு மாலையும் திங்கள் காலையும் தவிர) செய்திகள்இடம் பெறுகின்றன. அன்புள்ளங்களே, இந்நிகழ்ச்சிகள் கால ஓட்டத்தில் மாறும். புதிய நிகழ்ச்சிகள் புதிய பரிணாமத்துடன் அவ்வப்போது ஒலிக்கும். இதில் உங்கள் ஆலோசனைகளுக்கு என்றுமே இடமுண்டு.

நம் தொடர்பகங்கள் :
வானொலி நேயர்கள் எளிதாகக் கருத்துக் கடிதங்களை அனுப்புவதற்கும், தபால் செலவைக் குறைப்பதற்கும், தபால்களைத் துரிதமாய்ப் பெறுவதற்கும் வசதியாக, சென்னை, கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களில் தற்சமயம் கிளை அலுவலகங்கள் உள்ளன.
வானொலி தவிர இணைய வலைத் தொடர்பு (Internet) அமைப்பிலும் நிகழ்ச்சிகளைக் கேட்க முடியும்.

மேலும் விபரங்களுக்கு :
வத்திக்கான் வானொலி, இந்திய அலுவலகம், இலொயோலாக் கல்லூரி, தபால் பெட்டி எண் 3301, சென்னை 600 034.
அல்லது
இலங்கை முகவரிகள்

அருட்திரு டி.ஜே.கிருபாகரன், ஆயர் இல்லம், தபால் பெட்டி எண் 02, யாழ்ப்பாணம், இலங்கை
அல்லது
அருட்திரு. தமிழ் நேசன், சமூகத் தொடர்பு மையம், தூய வளன் தெரு, பெட்டா, மன்னார்.

தலைமையக முகவரி
Vatican Radio, Tamil Programs, Indian Section, 00120 Vatican City.
என்பவைகளோடு தொடர்பு கொள்ளுங்கள்.

மின் அஞ்சல் : indiano.tamil@spc.va
மேலும் விபரங்களுக்கு வத்திக்கான் வானொலி அல்லது வத்திக்கான் இணையதளங்களைத் திறக்கலாம்.

வத்திக்கான் வானொலி இணையதளம்: www.radiovaticana.va
வத்திக்கான் இணையதளம்: www.vatican.va

விபரங்களும் மாத இதழும் www.anbinmadal.org என்ற இணையத்தளத்திலும் தரப்பட்டுள்ளன.

நேயர் சந்திப்புகள்

1931ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த வானொலி, 1965ம் ஆண்டு தமிழ் ஒலிபரப்பைத் துவக்கியது. தமிழ் ஒலிபரப்பில் 50 ஆண்டுகளை(2015) நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது இந்த வானொலி. ஒவ்வோர் ஆண்டும் இயலவில்லையெனினும், முடிந்த வரையில் அவ்வப்போது நேயர்களைச் சந்தித்து கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு வருகிறோம். சேலம், திருச்சி, சென்னை, வேலூர், ஈரோடு, நாகர்கோவில், வேளாங்கண்ணி, பாளையங்கோட்டை ஆகிய இடங்களிலும் இலங்கையில் மன்னார், கட்டன் ஆகிய இடங்களிலும் நேயர் கூட்டங்களை நடத்தியுள்ளோம். வத்திக்கான் வானொலியின் தமிழ்ச் சேவை செப்டம்பர் 4, 2005 அன்று திருச்சி பல்நோக்கு சமூகப் பணி மைய அரங்கில்; தனது 40 ஆம் ஆண்டு விழாவைச் சிறப்பித்தது. திருச்சி ஆயர் மேதகு ஆன்டனி டிவோட்டா, திண்டுக்கல் ஆயர் மேதகு அந்தோணி பாப்புசாமி, மதுரை ஆதீனம் ஸ்ரீ ஞான சம்பந்த தேசிக பரமாச்சாரியார், திருச்சி நகர மேயர் திருமதி சாருபாலா தொண்டைமான், திருச்சி தூய அன்னாள் சபை அதிபர் அருட் சகோதரி எட்விச் டோலரோசா, திருச்சி ஜமால் முகமது கல்லூரி துணை முதல்வர் பேராசிரியர் பீ.மு.மன்சூர், சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரி பேராசிரியை முனைவர் சித்ரா, திரைப்பட இயக்குனர் திரு.இரா. காளீஸ்வரன், திரைப்பட இயக்குனர் திரு.பீ. லெனின், திரைப்பட பாடல் ஆசிரியர் கவிஞர் அறிவுமதி ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்புரைகளும் உரைகளும் ஆற்றினர். இவ்விழாவில் தமிழ் நேயர்களின் பங்கு குறிப்பிடும்படியானது. இதில் அவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தமிழ் ஒலிபரப்பு பற்றிய தங்களின் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளை முன்வைத்தனர். வத்திக்கான் வானொலி தமிழ்ப்பிரிவின் 45ம் ஆண்டு கொண்டாட்டம் 2010ம் ஆண்டு மே மாதம் 2ம் தேதி திருச்சி புனித வளன் கல்லூரியில் திருச்சி ஆயர் மேதகு ஆன்டனி டிவோட்டா தலைமையில் நேயர்களின் பெருமெண்ணிக்கையிலான பங்கேற்புடன் சிறப்பிக்கப்பட்டது. காலை முதல் மாலை வரை இடம்பெற்ற இந்த கொண்டாட்ட நிகழ்வுகளில் நேயர்களின் கருத்தறிதலே முக்கிய இடம் வகித்தது.

+
நம் நிகழ்ச்சிகளை உங்கள் ஒலிபரப்பில் - பயன்படுத்த விரும்பினால்

வத்திக்கான் வானொலி தன் நிகழ்ச்சிகளை ஐந்து கண்டங்களுக்கும் நேரடியாக ஒலிபரப்புவது மட்டுமல்ல, பல நாடுகளின் வானொலிகள் மூலம் மறு ஒலிபரப்பும் செய்கிறது.(2007ல் ஏறத்தாழ 1000 வானொலிகள் இதை ஆற்றின). இதற்கென பல வானொலிகள் ஒப்பந்தமும் இட்டுள்ளன. பெரும்பாலும் இவை கிறிஸ்தவ வானொலிகளே. இத்தகைய செயற்பாட்டின் மூலம் வத்திக்கான் வானொலி ஒலிபரப்பு அதிக மக்களை அடைய முடிகிறது. 24 ஐரோப்பிய, 22 ஆப்ரிக்க, 22 அமெரிக்க, 6 ஆசிய மற்றும் ஓசியானியா பகுதி நாடுகளைச் சேர்ந்த எண்ணற்ற வானொலிகள் வத்திக்கான் வானொலி நிகழ்ச்சிகளை மறு ஒலிபரப்பு செய்து வருகின்றன.

வத்திக்கான் வானொலி நிகழ்ச்சிகளை மறு ஒலிபரப்பு செய்ய விரும்புவோர், அதன் பன்னாட்டு உறவுகளுக்கான அலுவலகத்தின் அனுமதி பெற்றிருத்தல் அவசியம். அவ்வனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : relint@spc.va or fax number +39 06 6988 3237 (Mr. Giacomo Ghisani, Head of International Relations, tel. number +39 06 6988 3945). இவ்விண்ணப்பத்தைத் தொடர்ந்து, மறு ஒலிபரப்புக்குத் தேவையான விவரங்கள் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

+
எங்கள் வரலாறு

இயேசுவின் நற்செய்தியும் மானிட நட்பும் ஒன்றாகக் கலந்ததன் விளைவே வத்திக்கான் வானொலி. திருத்தந்தை பதினோராம் பத்திநாதரும் குலியெல்மோ மார்க்கோனியும் நண்பர்கள். இத்திருத்தந்தை திருச்சபையின் தலைமைப்பணியை ஏற்றதும் தமது செய்தி பாரெங்கும் செல்ல வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டார். இதற்கென வானொலி ஒன்றை வடிவமைக்குமாறு தனது நண்பர் மார்க்கோனியைக் கேட்டார். அப்போதுதான் வானொலியைக் கண்டுபிடித்திருந்த மார்க்கோனி, திருத்தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றும் பணியில் இறங்கினார். 1931ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி, வத்திக்கான் வாரலாற்றின் பொன்னான நாட்களில் ஒன்று. திருத்தந்தைக்கென வானொலி ஒன்று தனது ஒலிபரப்புக்குத் தயாரானது. திருத்தந்தை பதினோராம் பத்திநாதர் முன் முழந்தாளிட்டு அவர் கரங்களை முத்தி செய்த பின்னர் ஒலிவாங்கியைப் பிடித்தார் மார்க்கோனி. அவரின் ஒலி அலைகள் காற்றில் வான் அலைகாளாகச் சிதறின. "இயற்கையின் புதிரான சக்திகளை மனிதன் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கும் எல்லாம் வல்ல இறைவனின் பெருந்துணையுடன் ஒரு கருவியைக் கண்டுபிடிக்க முடிந்தது. திருத்தந்தையின் குரல் உலகெங்கும் கேட்க வழி செய்தது" என்று பேசினார்.

பின்னர் திருத்தந்தை பதினோராம் பத்திநாதர் பக்கம் திரும்பி, "திருத்தந்தையே! தாங்கள் என்னிடம் செய்யப் பணித்த பணியை இன்று உம்மிடமே திருப்பி அளிக்கின்றேன். தங்களது செய்தியை உலக மக்கள் எல்லாரும் கேட்கச் செய்யுங்கள்" என்றார். இவ்வரிய நிகழ்வினைப் பற்றி ஒரு நிருபர் பின் வருமாறு எழுதியிருந்தார் : "இத்தருணத்தில் அகில உலகும் காத்திருக்கிறது. கிறிஸ்துவின் பிரதிநிதியாகிய திருத்தந்தை, இந்தப் புதிய கருவி மூலம் தெளிவான குரலில் பேசத் தொடங்கினார். அப்போது நேரம் சரியாக மாலை 4.49. அது 1931ம் ஆண்டு பிப்ரவரி 12".
திருத்தந்தை பதினோராம் பத்திநாதரும் இலத்தீனில் தான் கைப்பட எழுதிய முதல் வானொலிச் செய்தியைக் கணீர் குரலில் வாசித்தார். அவருடைய செய்தி திருவிவிலியத்திலிருந்து எடுக்கப்பட்டதாய் நற்செய்தியின் உலகளாவியத் தன்மையை வலியுறுத்துவதாய் அமைந்திருந்தது. "வானங்களே! கேளுங்கள். பூவுலகே! பூமியின் கடைக்கோடியில் வாழ்பவர்களே, என் வாயிலிருந்து வருவதை உற்றுக் கேளுங்கள்" என்றார்.
அந்நாளிலிருந்து வத்திக்கான் வானொலி திருத்தந்தையரின் குரலை ஊருக்கும் உலகுக்கும் (Urbi et Orbi) ஒலிபரப்பி வருகிறது. திருத்தந்தையின் வானொலி உலகப் பாரம்பரியச் சொத்துக்களில் விலைமதிப்பற்ற ஒன்று.

நடந்துவந்த பாதை :

1940ம் ஆண்டு ஜனவரியில் நாத்ஸி வதைப்போர் முகாம்களைக் கண்டித்து முதன் முதலாகச் செய்திகளை ஒலிபரப்பியது வத்திக்கான் வானொலியே. குடும்பங்கள் போர்க்கைதிகளைத் தொடர்புகொள்வதற்கு உதவியாக தகவல் அலுவலகம் ஒன்றையும் வானொலி நிறுவியது. 1940 க்கும் 1946 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 12 இலட்சத்து நாற்பதாயிரத்துக்கு(12,40,000) அதிகமான உதவித்தகவல்கள் ஒலிபரப்பப்பட்டன.
இரண்டாம் உலகப் போர் முடிவதற்குள் வத்திக்கான் வானொலி இன்னும் பல மொழிகளில் ஒலிபரப்பைத் தொடங்கியது. அதனால் அதிக சக்திமிக்க வானலைக் கொடிகள் (Antennas) தேவைப்பட்டன. உரோமைக்கு வடக்கே 20 மைல்களுக்கு அப்பால், பிராச்சானோ ஏரிக்கு அருகே, சாந்தா மரியா தி கலேரியா (Santa Maria di Galeria) என்ற இடத்தில் 440 ஹெக்டேர் நிலப்பரப்பில் புதிய ஒலிபரப்பு மையத்தை திருத்தந்தை 12ம் பத்திநாதர் 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 27ம் தேதி திறந்து வைத்தார். இங்கே 11 நீட்சி அலை மற்றும் சிற்றலை ஒலிபரப்பிகள் ( 100 மற்றும் 500 கி.வா. இடைப்பட்டவை) நேரடி வானலைக் கொடிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. உலகிலே மிகப் பெரிய சுழலும் வானலைக் கொடிகளுள் ஒன்று இங்கே உள்ளது.

1958ம் ஆண்டு கர்தினால் ஜூசப்பே ஜான் ரொன்காலி, திருத்தந்தை 23ம் ஜான் என்ற பெயருடன் பொறுப்பேற்ற போது வத்திக்கான் வானொலி 32 மொழிகளில் ஒலிபரப்பி வந்தது. பேத்ரியானோ (Petriano) அருங்காட்சியகம் இருந்த இடத்தில் புதிய அலுவலகங்களும் ஒலிப்பதிவுக் கூடங்களும் அமைக்கப்பட்டன. இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கம் பற்றிய நேரடி வருணனைகள் மற்றும் செய்திகளை ஒலிபரப்புவதற்கு 3000த்துக்கும் அதிகமான மணி நேரத்தை ஒதுக்கியது. 1963ம் ஆண்டில் திருத்தந்தை 6ம் பால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு அடுத்த ஆண்டில் அவர் புனித பூமிக்கு அப்போஸ்தலிக்கத் திருப்பயணம் மேற்கொண்டார். வத்திக்கான் வானொலி நிருபர்களும், தொழிற்நுட்ப கலைஞர்களும் திருத்தந்தையர்களின் திருப்பயணங்களில் அவர்களுடன் சென்று அப்பயணங்கள் பற்றிய நேரடி வருணனைகளையும் மற்றும் பல செய்திகளையும் ஒலிபரப்புவதற்கு இத்திருப்பயணமே தொடக்கமாக அமைந்தது.

1970ம் ஆண்டு வத்திக்கான் வானொலியின் தயாரிப்பு மையம் பலாஸ்தோ பியோ எனும் பியோ மாளிகைக்கு (Palazzo Pio) இடமாற்றம் செய்யப்பட்டது. அச்சமயத்தில் இந்தியா உட்பட 35 நாடுகளிலிருந்து 260 பேர் பணியாற்றி வந்தனர். திருத்தந்தை முதலாம் ஜான் பால் 33 நாட்களே பாப்பிறைப் பணியாற்றி இறந்ததையொட்டி 1978ம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி கர்தினால் கரோல் வொய்த்தில்வா, திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இத்தாலி மற்றும் வெளிநாடுகளில் அதிகமான திருப்பயணங்களை மேற்கொண்ட திருப்பயணத் திருத்தந்தை என்ற பெயரைப் பெற்றிருப்பவர்.

மைல் கற்கள் :

1980களின் இறுதிக்குள் திருப்பயணத் திருத்தந்தையின் வியப்புக்குரிய மேய்ப்புப் பணி நடவடிக்கைகளை ஒலிபரப்புவதற்கென வத்திக்கான் வானொலி தனது தொழிற்நுட்ப மற்றும் மனித வளங்களைத் தொடர்ந்து மேம்படுத்தி உலக அளவில் ஒலிபரப்பில் ஓர் உயரிய இடத்தைப் பிடித்து விட்டது. 1990களில் செயற்கைக்கோள் வழியான ஒலிபரப்பையும் தொடங்கியது. உரோமையிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வாழும் மக்கள் கேட்பதற்கு வசதியாக தல அலைவரிசையிலும் ஒலிபரப்புகள் இடம் பெறுகின்றன. 1995ம் ஆண்டில் வத்திக்கானை மையமாகக் கொண்ட செயற்கைக்கோள் தொடர்பு மையம் கட்டப்பட்டது. உலகில் இயங்கும் வானொலிகளில் அதிகமான மொழிகளில் ஒலிபரப்பை நடத்துவது வத்திக்கான் வானொலி. தற்சமயம் 45 மொழிகளில் ஒலிபரப்பை நடத்துகின்றது. இதில் நிர்வாகத்தினர், நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள், தொழிற்நுட்பத் துறையினர் என ஏறக்குறைய 59 நாடுகளிலிருந்து சுமார் 400 பேர் பணியில் உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையினர் பொதுநிலையினர். திருத்தந்தையின் இவ்வானொலியை பல்வேறு நாட்டு மக்களைக் கொண்ட ஒரு மினி கத்தோலிக்க உலகம் என்று அழைக்கலாம்.

வானொலி நிகழ்ச்சிகள் :

இங்கு தயாரித்து வழங்கப்படும் நிகழ்ச்சிகள் பலதரப்பட்டவை. இவற்றில் சில ஐரோப்பிய மொழிகளில் நேரடிச் செய்தி ஒலிபரப்பு உண்டு. தினமும் இலத்தீனில் திருப்பலி, செபமாலை, இன்னும், வாரம் இருமுறை ஆங்கிலத்தில் திருப்பலி என திருவழிப்பாட்டுத் திருப்பணிகள் உண்டு. இசை, பக்திஇசை நிகழ்ச்சிகள் உண்டு. விவிலிய விளக்கங்கள் உண்டு. கலாச்சாரம் மற்றும் பொதுப்படையான நிகழ்ச்சிகளில் விவாதங்கள், கலந்துரையாடல், உலகில் முக்கியமான நபர்களோடு நேர்முகச் சந்திப்பு போன்றவை இடம் பெறுகின்றன. வத்திக்கான் தூய பேதுரு பேராலயப் பசிலிக்கா மணி முழங்க, "Christus Vincit" அதாவது கிறிஸ்து வெல்கிறார் என்ற இசையுடன், இயேசு கிறிஸ்துவுக்குப் புகழ் என்ற வாழ்த்துடன் தினந்தோறும் ஒவ்வொரு மொழியிலும் 15 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. பெரும்பாலும் இந்த ஒலிபரப்புகள் மீண்டும் அன்றைய நாளில் மறுஒலிபரப்பு செய்யப்படுகின்றன.

திருத்தந்தையின் குரல்:

திருத்தந்தை அகிலத் திருச்சபையின் இயக்கத்திலும், அதன் வளாச்சியிலும் நாளுக்கு நாள் அதிகக் கவனம் செலுத்தி வருகிறார். உலகமெனும் இப்பெரிய மனிதக் குடும்பத்தின் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கெடுப்பதற்கான தமது விருப்பத்தையும் தெரிவித்து வருகிறார். இதனாலே அவர் ஒவ்வொரு நாளும் வத்திக்கானில் நாடுகளின் தலைவர்கள், தூதரக அதிகாரிகள், தேசிய, சர்வதேச கழகங்களின் பிரதிநிதிகள், திருச்சபை, அரசியல் பிரமுகர்கள் எனப் பலரைச் சந்தித்து வருகிறார். சிறிய, பெரிய எண்ணிக்கையிலும் தம் மந்தையைச் சந்திக்கிறார். இத்தாலியிலும் மற்ற நாடுகளிலும் மேய்ப்புப் பணி திருப்பயணங்களையும் மேற்கொண்டு வருகிறார். அச்சமயங்களில் அவர் நிகழ்த்தும் திருப்பலிகள், மறையுரைகள், உரைகள், செய்திகள், வாழ்த்துக்கள் என எல்லாவற்றையும் வத்திக்கான் வானொலியின் தொழிற் நுட்பக் கலைஞர்கள் கணிப் பொறியில் பதிவு செய்கின்றனர். வானொலிப் பணியாளர்கள் அவற்றைத் தங்கள் நிகழ்ச்சிகளில் பயன்படுத்தி திருத்தந்தையின் குரல் உலகெங்கும் ஒலிக்கச் செய்கின்றனர்.

மிகவும் பிரபல்யமான திருத்தந்தையின் புதன் பொது மறைபோதகம் மற்றும் ஞாயிறு மூவேளை செப உரை கணனி வலைத் தொடர்பு (Internet) மூலமும் ஒலிபரப்பப்படுகின்றன. அவற்றை அந்தந்த நாட்களில் மட்டுமல்ல, ஒருவாரம் வரையிலும் வலைத் தொடர்பு மூலம் கேட்கலாம். இவை தவிர, திருத்தந்தை நிகழ்த்தும் மற்றும் கலந்து கொள்ளும் சிறப்புத் திருவழிபாடுகள், அவர் கலந்து கொள்ளும் கூட்டங்கள் பற்றிய நேரடி ஒலிபரப்பையும் வத்திக்கான் வானொலி நடத்தி வருகிறது.

திருத்தந்தை இத்தாலிக்கு வெளியே மற்ற நாடுகளுக்குத் திருப்பயணங்கள் மேற்கொள்ளும்போது, வத்திக்கான் வானொலி நிருபர்களும், தொழிற் நுட்பக் கலைஞர்களும் அவருடன் சென்று அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளை உடனுக்குடன் ஒலிபரப்புகிறார்கள்.

CHRISTUS VINCIT

CHRISTUS VINCIT CHRISTUS REGNAT CHRISTUS IMPERAT - இந்த இலத்தீன் சொற்களுக்கு கிறிஸ்து வெல்கிறார், கிறிஸ்து அரசாள்கிறார், கிறிஸ்து வழிநடத்துகிறார் என்பது பொருள். வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலய வளாகத்தில் உள்ள நினைவுத் தூணில் இவ்வார்த்தைகளைப் பொறித்து வைத்தார் திருத்தந்தை ஐந்தாம் சிக்ஸ்துஸ். இச்சொற்கள் வத்திக்கான் வானொலி நிகழ்ச்சிகள் தொடங்கு முன்னர் ஒலிக்கும் தொடக்க இசையாக 1949 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாந் தேதி அறிமுகப்படுத்தப்பட்டதாகும். இது யான் கான்க் (Jan Kanc) என்பவரால் எழுதப்பட்டு ஆல்பெரிக்கோ வித்தாலினி (Alberico Vitalini) என்பவரால் சீர்படுத்தப்பட்டது. இவ்விசை ஒலித்தபின்னர் இயேசு கிறிஸ்துவுக்குப் புகழ் (Laudetur Jesus Christus) என்ற இறை வாழ்த்தும் தொடர்ந்து ஒலிக்கும்.

பொதுத் தகவல்:

ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு : 1931

மொழிகள் : 45

ஓர் ஆண்டில் ஒலிபரப்பாகும் கால அளவு : 24, 117 மணிகள் 36 நிமிடங்கள்.
ஒரு வாரத்தில் ஒலிபரப்பாகும் கால அளவு : 463 மணிகள் 48 நிமிடங்கள்.
74 நாடுகளைச் சேர்ந்த 1200 வானொலி நிலையங்கள் எமது நிகழ்ச்சிகளை மறு ஒலிபரப்புச் செய்கின்றன.

பணியாளர் பற்றிய விபரங்கள்:

பணியாளர்கள் 355 பேர்
நாடுகள் 59
துறவியர் 44
பொதுநிலையினர் 311
ஆண்கள் 240
பெண்கள் 115

வத்திக்கான் வானொலியில் இந்திய மொழிகள் பிறந்த வரலாறு

உலகில் இயங்கும் வானொலிகளில் அதிகமான மொழிகளில் ஒலிபரப்பை நடத்துவது வத்திக்கான் வானொலி. அதுவும் இது வானொலியைக் கண்டுபிடித்த மார்க்கோனியால் வடிவமைக்கப்பட்டது என்பது பெருமைக்குரியது. தற்சமயம் 45 மொழிகளில் ஒலிபரப்பை நடத்துகின்றது. இதில் இந்திய துணைக்கண்டத்திற்கென 5 மொழிகளில் ஒலிபரப்பு இடம்பெறுகிறது. 1964 டிசம்பரில் மும்பையில் (பம்பாய்) நடைபெற்ற 38வது உலக திருநற்கருணை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக திருத்தந்தை ஆறாம் பால் அங்குச் சென்றதைத் தொடர்ந்து, 1965 மே மாதம் வத்திக்கான் வானொலியின் இந்தியப் பிரிவு உதயமானது.

முதலில்; இந்தி, தமிழ், மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பத்து நிமிட இரவு ஒலிபரப்பு தொடங்கப்பட்டது. திங்களும் வியாழனும் இந்தியிலும், செவ்வாயும் வெள்ளியும் தமிழிலும், புதனும் சனியும் மலயாளத்திலும்;, திங்கள் முதல் சனி வரை ஆங்கிலத்திலும் பத்து நிமிட ஒலிபரப்பு இடம் பெற்றது.

1982 - இந்த நான்கு மொழிகளும் நடத்தி வந்த இரவு ஒலிபரப்பு காலையில் மறு ஒலிபரப்பு செய்யப்பட்டது.

12 மே, 1985 - மலயாள மொழியில் 15 நிமிட காலை தினசரி ஒலிபரப்பு தொடங்கியது.
07 ஜனவரி 1986 - இந்தி, தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 15 நிமிட காலை தினசரி ஒலிபரப்பு தொடங்கியது. (திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலின் இந்தியாவுக்கான முதல் திருப்பயணத்தையொட்டி தினசரி ஒலிபரப்பு துவங்கியது). இரவு ஒலிபரப்பு ஆறு நிமிடங்களே அதுவும் செய்தி ஒலிபரப்பாகவே அமைந்திருந்தது. இதே ஆண்டின் இறுதியில் அந்த நான்கு மொழிகளும் பத்து நிமிட இரவு தினசரி ஒலிபரப்பைத் தொடங்கின.
25 மார்ச் 1990 - இந்தி, தமிழ், மலயாளம் ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளும் தினசரி 15 நிமிட ஒலிபரப்பைத் தொடங்கின. இரவு ஒலிபரப்பு காலையில் மறு ஒலிபரப்பு செய்யப்பட்டது.
23, செப். 1993 - இந்நான்கு மொழிகளும் காலை மற்றும் இரவில் தினசரி 20 நிமிட ஒலிபரப்பைத் தொடங்கின. இரவு ஒலிபரப்பு காலையில் மறு ஒலிபரப்பு செய்யப்பட்டது.
24 அக். 1993 - உருது மொழியில் ஞாயிறு மட்டும் 7 நிமிட ஒலிபரப்பு ஆரம்பமானது. இது இந்தி ஒலிபரப்போடு சேர்ந்து இடம் பெற்றது.
30 மார்ச் 2003 - உருது மொழி ஞாயிறு மற்றும் புதன் மாலையில் 15 நிமிட ஒலிபரப்பைத் தொடங்கியது. இந்நிகழ்ச்சிகள் மறுபடியும் அடுத்த நாள் காலையிலும் ஒலிபரப்பப்படுகின்றன.
26 அக். 2003 - இந்தி, தமிழ், மலயாளம் ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளும் இர்க்குட்ஸ்க்கிலிருந்து ( இரஷ்யா) காலை மறு ஒலிபரப்பைத் தொடங்கின.

திருத்தந்தையரும் தென்கிழக்கு ஆசியாவும்:

இவ்வுலகில் கிறிஸ்துவின் பிரதிநிதியாக இருக்கும் திருத்தந்தையர், தென்கிழக்கு ஆசியாவுடன் மிக நெருங்கிய உறவு வைத்திருக்கிறார்கள் என்பதை அவர்கள் அப்பகுதிக்கு மேற்கொண்ட பயணங்கள் தெளிவாக்குகின்றன.

1964 - திருத்தந்தையர் வரலாற்றில் முதன் முறையாக திருத்தந்தை ஒருவர் இந்தியா உட்பட தென்கிழக்கு ஆசியாவுக்குத் திருப்பயணம் மேற்கொண்டார். மும்பையில் (பம்பாய்) நடைபெற்ற 38வது உலக திருநற்கருணை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக டிசம்பர் 2 முதல் 5 வரை திருத்தந்தை ஆறாம் பால் அங்குச் சென்றார்.

1981 - திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் தென்கிழக்கு ஆசிய மண்ணில் முதன் முறையாகக் கால்தடம் பதித்தார். 16 பெப்ருவரி 1981இல் கராச்சியில் (பாகிஸ்தான்) திருப்பயணம் மேற்கொண்டார்.

1986 - திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் இந்தியாவுக்குத் திருப்பயணம் மேற்கொண்டார். இது அவரின் 29 வது வெளிநாட்டுத் திருப்பயணம்.

1986 - திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் 19 டிசம்பர், 1986 அன்று பங்களாதேஷிக்கு முதன் முறையாகத் திருப்பயணம் மேற்கொண்டார். இது அவரின் 32 வது வெளிநாட்டுத் திருப்பயணம்.

1995 - திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் இவ்வாண்டு ஜனவரியில் இலங்கைக்கு முதன் முறையாகத் திருப்பயணம் மேற்கொண்டார். இலங்கையின் திருத்தூதர் என அழைக்கப்படும் இறையடியார் ஜோசப் வாஸ் என்பவரை ஜனவரி 21 ந்தேதி அருளாளர் (முத்தி பெற்றவர்) என்ற நிலைக்கு உயர்த்தினார்.

1999 - திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் தனது 89 வது வெளிநாட்டுத் திருப்பயணமாக இந்தியத் தலைநகர் டெல்லிக்குச் சென்றார். அங்கு 'ஆசியாவில் திருச்சபை' என்னும் அப்போஸ்தலிக்க ஏட்டை நவம்பர் ஆறாம் தேதி வெளியட்டார். இது, வத்திக்கானில் நடைபெற்ற ஆசிய ஆயர் மன்றத் தீர்மானத் தொகுப்பாகும்.