2015-01-12 17:29:00

இந்தியாவில் காச நோய் கட்டுப்பாடு வேகம் போதாது


சன.12,2015. இந்தியாவில் காச நோய் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் உலக நலவாழ்வு அமைப்பின் இலக்கை எட்டுவதற்கு இந்த வேகம் போதாது என அந்த அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

இது குறித்துப் பேசிய அந்த அமைப்பின் இந்தியாவுக்கான பிரதிநிதி நதா மெனப்தே அவர்கள், வரும் 2050-ம் ஆண்டுக்குள் காச நோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை அடைய வேண்டுமானால் இந்தியாவில் ஆண்டுக்கு 19 முதல் 20 விழுக்காட்டு அளவுக்கு இந்த நோயைக் கட்டுப்படுத்த வேண்டும். ஆனால் இது இப்போது ஆண்டுக்கு வெறும் 2 விழுக்காடாக மட்டுமே உள்ளது என்று கூறினார்.

எனினும், இப்போதுள்ள செயல்திட்டம் மற்றும் தொழில்நுட்பங்களைத் திறம்பட பயன்படுத்தினாலே வரும் 2025-ம் ஆண்டுக்குள் காச நோய்க் கட்டுப்பாட்டை 10 விழுக்காடாக அதிகரிக்க முடியும். மேலும், காசநோய்க் கட்டுப்பாட்டு வேகத்தை அதிகரிக்க புதிய செயல்திறன் மிக்க தடுப்பு மருந்துகள், தொடக்க நிலையிலேயே நோய் பாதிப்பைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்கான புதிய உத்திகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது என்றும் கூறினார் நதா மெனப்தே .

அதேநேரம், ஊட்டச்சத்து குறைபாடு, குடிசைப் பகுதிகளில் மக்கள் நெருக்கம், காற்றோட்ட வசதி இல்லாதது, புகைப்பழக்கம் உள்ளிட்ட சமூகப் பிரச்சனைக்கும் தீர்வு காண வேண்டியது அவசியம். நகர்ப்புற காச நோயாளிகளில் பலர் தனியார் மருத்துவமனை களில் சிகிச்சை எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் திருப்திகரமாக இல்லை. கடுமையான விதிமுறைகளின் மூலம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 ஆதாரம் : தி இந்து/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.