2015-01-21 15:28:00

திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை


சன.21,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆசியாவில் தன் திருப்பயணத்தை முடித்துக்கொண்டு இத்திங்களன்று திரும்பியபின், இப்புதனன்று முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 6ம் பவுல் மண்டபத்தில் புதன் மறைக்கல்விப் போதனையை முன்னிட்டு திருப்பயணிகளைச் சந்தித்தார். ஆசியாவில் தான் பயணம்செய்த இலங்கை மற்றும் பிலிப்பீன்ஸ் நாடுகள் குறித்த தனது இனிமையான எண்ண ஓட்டங்களை இந்த மறைக்கல்விப் போதனை நேரத்தின்போது பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இலங்கை மற்றும் பிலிப்பீன்ஸ் நாடுகளில் நான் மேற்கொண்ட திருப்பயணம், அங்குள்ள கத்தோலிக்க சமூகங்களுடனான மகிழ்வுடன்கூடிய சந்திப்பை உள்ளடக்கியதாக இருந்தது. இலங்கையில் நான் மிகப்பெரும் மறைப்பணியாளர் ஜோசப் வாஸை புனிதராக அறிவித்தேன். அந்த நாட்டில், ஏழைகளுக்கான பணியிலும், பிறமத விசுவாசிகளுடன் கொண்டிருக்கும் மதிப்புடன் கூடிய உறவுகளிலும் இன்னும் தூண்டுதலை வழங்குவதாக உள்ளன புனித ஜோசப் வாஸின் பிறரன்புப் பணி எடுத்துக்காட்டுகள். நீண்டகாலமாகத் தொடர்ந்த உள்நாட்டுப்போரின் விளைவுகளை இலங்கை நாடு இன்னும் அனுபவித்துக்கொண்டிருக்கிறது. குணப்படுத்தல், அமைதி மற்றும் ஒப்புரவின் கருவிகளாக அனைத்து மதத்தலைவர்களும் ஒன்றிணைந்து உழைப்போம் என்ற அழைப்பை, இலங்கையில் நான் மதத்தலைவர்களுடன் நடத்திய சந்திப்பின்போது விடுத்தேன்.

பிலிப்பீன்ஸ் நாட்டிற்கான எனது திருப்பயணம், அந்நாட்டில் யொலண்டா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுடனான எனது ஒருமைப்பாட்டின் அடையாளமாக இருந்தது. நம்மை ஒருபோதும் ஏமாற்றாத இறைக்கருணையின் மீதான நம்பிக்கையினை தக்லோபான் தீவில் கொண்டாடிச் சிறப்பித்தோம். இறைத்திட்டத்திலும் சமூகத்திலும் குடும்பங்கள் வகிக்கும் முக்கிய அடிப்படையான இடத்தைப் பாதுகாத்து அதனை வாழ்ந்திட வேண்டும் என குடும்பங்களை நோக்கி மனிலாவில் அழைப்புவிடுத்தேன். கூறுபடா நிலையையும், ஏழைகள் மீதான இரக்கத்தையும் கொண்ட ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புமாறு இளைஞர்களுடனான சந்திப்பின்போது அவர்களிடம் விண்ணப்பித்தேன். என் திருப்பயணத்தின் இறுதியில் பிலிப்பீனோ மக்களை, அவர்களுக்கு ஆதரவு அளிப்பவரும், பாதுகாவலருமான குழந்தை இயேசுவிடம் ஒப்படைத்தேன். மேலும், பிலிப்பீனோ மக்கள், இந்த மிக உயர்ந்த ஆசியக் கண்டத்தில் நற்செய்தியின் மதிப்புமிக்க சாட்சிகளாக உறுதியுடன் தொடர்ந்து செயல்படுமாறு வலியுறுத்தினேன்.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி போதனையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  நைஜர் நாட்டில் அண்மையில் இடம்பெற்ற மத அடிப்படையிலான வன்முறைகள் குறித்து தன் ஆழ்ந்த கவலையையும் வெளியிட்டார். இறுதியில் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.