2015-01-24 15:27:00

Dignitas connubii திருமண வழக்குகள் தீர்க்கப்பட உதவும்


சன.24,2015. திருமணத்தின் மாண்பைப் புரிந்துகொள்ள உதவும் Dignitas connubii என்ற ஏடு, திருமணம் குறித்த சட்டத்தில் பயிற்சிபெற்றவர்களுக்கு மட்டுமல்லாமல், திருமணம் குறித்த வழக்குகளை நடத்தும் தலத்திருஅவை நீதிமன்றப் பணியாளர்களுக்கும் உதவும் என்ற தனது நம்பிக்கையை வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருமணத்தின் மாண்பு குறித்து உரோம் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கில் கலந்துகொண்ட 120 பிரதிநிதிகளை இச்சனிக்கிழமையன்று வத்திக்கானிலுள்ள கிளமெந்தினா அறையில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறினார்.

இக்கருத்தரங்கில் பலர் கலந்துகொண்டுள்ளது, ஆன்மாக்களின் மீட்புக்காகப் பணியாற்றுவதற்குத் தலத்திருஅவை நீதிமன்றப் பணியாளர்கள் ஆர்வம் கொண்டிருப்பதைக் காட்டுகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.

Dignitas connubii என்ற ஏடு, திருமணம் சார்ந்த வழக்குகளை விரைவாக முடிப்பதற்கு உதவுவதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, இந்தப் பணியாளர்களின் பணிகளை அன்னைமரியாவிடம் அர்ப்பணிப்பதாகவும் கூறினார்.

Dignitas connubii என்ற ஏடு வெளியிடப்பட்டதன் பத்தாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, உரோம் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மூன்று நாள் பன்னாட்டுக் கருத்தரங்கு இச்சனிக்கிழமையன்று நிறைவடைந்தது.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.