2015-01-24 15:07:00

ஒவ்வொரு வன்முறைக்கும் மாற்று மருந்து மதங்கள் பற்றிய கல்வி


சன.24,2015. எக்காலத்தையும்விட இக்காலத்தில் முஸ்லிம்களுடன் உரையாடல் நடத்துவதற்குப் பயிற்சி அளிப்பது மிகவும் அவசியமாக உணரப்படும்வேளை, மதங்களுக்கிடையே நிலவும் வேறுபாடுகளை அறிவதற்கும், ஏற்பதற்கும் மதங்கள் குறித்த கல்வியறிவு முக்கியம் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அரபு மற்றும் இஸ்லாமிய பாப்பிறை கல்வி நிறுவனம் உரோம் உர்பானியானம் பாப்பிறைப் பல்கலைகழகத்தில் நடத்திய மூன்று நாள் கருத்தரங்கில் கலந்து கொண்ட 250 பிரதிநிதிகளை இச்சனிக்கிழமையன்று வத்திக்கானில்(கிளமெந்தினா அறையில்) சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்காலத்தில் பல்சமய உரையாடல் அதிகம் தேவைப்படுகின்றது என்று கூறினார்.

இஸ்லாம்-கிறிஸ்தவ உரையாடலுக்குப் பொறுமையும், பணிவும், பொறுப்புணர்வும் தேவைப்படுகின்றன என்றும், திருப்பீடத்தில் முக்கியமானதாக உள்ள இந்நிறுவனம், பல்சமய உரையாடல் துறையில் பணி செய்யும் கிறிஸ்தவர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கு தேவையானதாகவும் இருக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.

அண்மை ஆண்டுகளில், சில தவறான புரிதல்கள் மற்றும் இடர்பாடுகள் இருந்தபோதிலும், முஸ்லிம்களுடன் உள்ளிட்ட பல்சமய உரையாடலில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதைக் குறிப்பிட்ட திருத்தந்தை, பல்சமய உரையாடலுக்குச் செவிமடுத்தல் அவசியம் என்றும் கூறினார்.

முதலில் டுனிசியா நாட்டில் தொடங்கப்பட்ட PISAI என்ற அரபு மற்றும் இஸ்லாமிய பாப்பிறை கல்வி நிறுவனம், பின்னர் உரோமையில் ஆரம்பிக்கப்பட்டது. இதன் ஐம்பதாம் ஆண்டு நிறைவையொட்டி பிற மதங்கள் பற்றிய கல்வியும் புரிதலும் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த அனைத்துலக கருத்தரங்கு இச்சனிக்கிழமையன்று நிறைவடைந்தது.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.