2015-02-04 15:06:00

திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை


பெப்.04,2015. கடந்த வாரம் தன் புதன் மறைக்கல்விப் போதனையில், தந்தையரின் மாண்பு மற்றும் பங்கு குறித்து தன் கருத்துக்களை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாரமும் அதே தலைப்பில் தொடர்ந்தார்.

நீதிமொழிகள் ஆகமம் 23ம் அதிகாரத்தில்,  'பிள்ளாய், நீ ஞானமுள்ளவனாயிருந்தால், நான் மனமகிழ்ச்சி அடைவேன். உன் நாவு நேர்மையானவற்றைப் பேசினால், என் உள்ளம் களிகூரும்' என்று ஒரு தந்தை தன் குழந்தைகளின் ஞானம் மற்றும் நேர்மை குறித்து மகிழ்வதைக் குறித்துக் கூறப்பட்டுள்ளதைக் காண்கின்றோம். (நீதி.23:15-16). இந்த வார்த்தைகள் ஒரு தந்தையிடமிருந்து எதிர்பார்க்கப்படும், அதேவேளை, இன்னொருவரால் நிரப்ப முடியாத தனிப்பட்ட பங்கு குறித்து எடுத்துரைக்கிறது. ஒரு நல்ல தந்தை என்பவர் தன் குழந்தைகளுக்கு அன்பு மற்றும் நேர்மையை தன் வாழ்வு எடுத்துக்காட்டு மூலம் கற்பிக்கிறார். தன் குழந்தைகளின் முழு வளர்ச்சியில் பொறுமையாக உதவும் நோக்கில் ஒரு தந்தையானவர் தன் இதயத்தை முதலில் ஒழுங்குமுறைப்படுத்தவேண்டும். பல வேளைகளில் தந்தையர் என்ற இடம் காலியாக இருக்கும் சூழல்களைக் கொண்ட சமூகங்களில் வாழும் தந்தையர்கள், குடும்பங்களில் தங்கள் இருப்பை உறுதிப்படுத்துவதுடன்,  குடும்ப வாழ்வில் தங்களை முழுமையாக ஈடுபடுத்த வேண்டிய தேவையும் உள்ளது. அனைத்துத் தந்தை நிலையின் எடுத்துக்காட்டாக நம் தந்தையாம் இறைவனை நமக்குச் சுட்டிக்காட்டுகிறார் இயேசு. இயேசு கூறிய உவமையில் வரும் காணாமல்போன மகனின் தந்தையைப்போல், நம் தந்தையாம் இறைவனும், தன் குழந்தைகள் வீடு நோக்கி திரும்பி வருவதற்காக பொறுமையுடன் காத்திருக்கிறார். நாம் பாதைமாறி அலையும்போதெல்லாம் நம்மை தன்னிடம் வரவேற்க, மன்னிப்பு மற்றும் இரக்கத்துடன் எப்போதும் காத்திருக்கிறார். புனித யோசேப் போல், கிறிஸ்தவத் தந்தையர்கள் தங்கள் குழந்தைகளைப் பாதுகாக்கவும், ஞானத்தையும் விசுவாசத்தையும் நேர்மையையும் கற்பிக்கவும் முயலும் வேளைகளில், எப்போதும் நம் நன்றியையும் ஆதரவையும் பாராட்டையும் அனுபவிப்பார்களாக.

இவ்வாறு தன் புதன் மறைக்கல்விப் போதனையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் உரையின் இறுதியில், உக்ரைன் நாட்டில் இடம்பெற்றுவரும் உயிரிழப்புகள் குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டார். “ஒரு நாட்டிற்குள் இடம்பெறும் இந்த சகோதரச் சண்டைகள் நிறுத்தப்படவும், இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் ஆறுதலடையவும் செபிக்குமாறு அழைப்புவிடுத்த திருத்தந்தை, இன்றையச் சூழல்களில் ‘வெற்றி' ‘தோல்வி’ என்ற வார்த்தைகள் வேதனைகளைத் தருபவைகளாக உள்ளன, இதற்குப் பதிலாக 'அமைதி' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவோம், அதுவே சரியான வார்த்தையாக இருக்க முடியும். கிறிஸ்தவர்களிடையே இடம்பெறும் இந்தப் போர் ஒரு தவறான எடுத்துக்காட்டாக உள்ளது. ஒரே திருமுழுக்கைப் பெற்றுள்ள கிறிஸ்தவர்கள் தங்களிடையே சண்டையிடுவது குறித்து சிந்தித்துப் பார்க்கட்டும். இந்த நாட்டில் அமைதியும் இணக்க வாழ்வும் திரும்பிட ஒருவர் ஒருவரிடையே பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வோம்” என மனதின் ஆழத்திலிருந்து விண்ணப்பத்தை விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.