2015-02-17 14:36:00

கல்வாரியில் இயேசுவின் இறுதி வார்த்தைகள் - பகுதி - 1


கடந்த ஈராண்டுகளுக்கும் மேலாக நாம் இயேசுவின் உவமைகளில் மேற்கொண்டுவரும் தேடல்களுக்கு ஓர் இடைவெளி தர விழைகிறேன். இன்னும் குறிப்பாகச்  சொல்லப்போனால், இந்த இடைவெளியை ஏழு வாரங்களுக்குத் தர விழைகிறேன். இந்த ஏழு வாரங்கள் நமக்கு ஒரு சிறப்பான காலம் என்பதால் இந்த இடைவெளி...

பிப்ரவரி 18, இப்புதனன்று நாம் தவக்காலத்தில் நுழைகிறோம். அடுத்த ஏழு வாரங்கள் நாம் மேற்கொள்ளும் தவக்கால முயற்சிகளை பொருளுள்ள வகையில் நிறைவேற்ற, இன்றுமுதல் ஏழு விவிலியத் தேடல்களில், இயேசு கல்வாரியில், சிலுவையிலிருந்து கூறிய வார்த்தைகளை சிறப்பாகச் சிந்திக்க முயல்வோம். இந்தச் சிறப்புத் தேடல்களுக்கு ஓர் அறிமுகமாக, தவக்காலத்தைப் பற்றிய நம் சிந்தனைகளைத் தெளிவாக்குவோம்.

தவக்காலத்தைப் பற்றிய நம் கண்ணோட்டம் என்ன? பொதுவாக, ‘தவக்காலம்’ என்றதும், சாம்பல், சாக்குத்துணி, சாட்டையடி என்று வருத்தம் தோய்ந்த அடையாளங்கள், நம் மனதை நிரப்பும். மனவருத்தம், ஒருவகை குற்ற உணர்வு, என்ற பாரமான எண்ணங்கள் மேலோங்கும். ஆனால், தவக்காலம் வசந்தத்தைக் கொண்டுவரும் புதியதோர் ஆரம்பம் என்ற கோணத்தில் சிந்திப்பது பயனளிக்கும்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாண்டு வழங்கியுள்ள தவக்காலச் செய்தியின் ஆரம்ப வார்த்தைகள் இந்த எண்ணத்தை உறுதி செய்கின்றன : "திருஅவை முழுவதும் மறுமலர்ச்சி பெறும் காலம், தவக்காலம். தனி மனிதரும்,  குழுமங்களும் மறுமலர்ச்சி பெறும் காலம் இது. அனைத்திற்கும் மேலாக, 'இதுவே அருள்நிறை காலம்' (2 கொரி. 6:2)" என்று திருத்தந்தை தன் தவக்காலச் செய்தியைத் துவக்கியுள்ளார். தவக்காலத்தை மறுமலர்ச்சியின் காலமாக, அருள்நிறை காலமாகக் கருதுவது, பயனுள்ள எண்ணம்.

தமிழில் நாம் தவக்காலம் என்று அழைப்பதை, ஆங்கிலத்தில் Lenten Season என்று அழைக்கிறோம். Lenten (அல்லது, Lencten) என்ற வார்த்தை ஒரு Anglo Saxon வார்த்தை. அதன் பொருள் வசந்தம். வசந்த காலம், தவக்காலம் இரண்டையும் இணைப்பதே ஓர் அழகான எண்ணம். புதுமையான எண்ணம்.

‘வசந்தம்’ - கேட்பதற்கு அழகான சொல், அழகான எண்ணம். உண்மைதான்... ஆனால், அந்த வசந்தம் வருவதற்கு முன் மாற்றங்கள், வேதனைக்குரிய மாற்றங்கள் நடைபெற வேண்டும். சாம்பலிலிருந்து மீண்டும் உயிர் பெற்று எழும் Phoenix பறவையைப்பற்றி கேள்விபட்டிருக்கிறோம். இல்லையா? அந்தப் பறவையைத் தவக்காலத்தின் ஒரு அடையாளமாக நாம் சிந்திக்கலாம்.

தவக்காலத்திற்கும் வசந்த காலத்திற்கும் என்ன தொடர்பு? தவக்காலத்திற்கு Phoenix பறவை எப்படி ஓர் அடையாளமாகும்? சிந்திக்கவேண்டிய கேள்விகள். உலகின் பல நாடுகளில் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரை கடும் குளிர் காலம். இந்தக் குளிர் காலத்திற்கு முன்னால் மூன்று மாதங்கள் இலையுதிர் காலம். எனவே, ஏறத்தாழ ஆறு மாதங்கள் மரங்களும் செடிகளும் தங்கள் இலைகளை இழந்து பனியில் உறைந்து போயிருக்கும். பனியில் உறைந்துபோன தாவர உயிரினங்களைப் பார்க்கும்போது, அவற்றில் உயிர் உள்ளதா, அவை பிழைக்குமா என்ற எண்ணங்களே மேலோங்கி இருக்கும். ஆனால், அந்த பனிக்குள்ளும் சிறு துளிர்கள் கண்ணுக்குத் தெரியாதபடி வளர்ந்திருக்கும். வெள்ளைக் கம்பளம்போல பரந்து, விரிந்து கிடக்கும் பனிப்போர்வை, சிறிது சிறிதாகக் கரையும்போது, அப்போர்வையின் கீழ் புதைந்துபோன துளிர்கள் தலை நிமிரும். மீண்டும் தாவர உலகம் தழைத்துவரும். அதுதான் Lenten Season எனப்படும் வசந்த காலம். உயிர்தரும் மாற்றங்களை உருவாக்கும் வசந்தக் காலத்தில் நாம் தவக்காலத்தை மேற்கொள்வது மிகவும் பொருத்தமானது.

தவக்காலத்தின் மற்றோர் அடையாளம், Phoenix பறவை. 500 அல்லது 1000 ஆண்டுகள் வாழ்ந்ததாய் சொல்லப்படும் இந்தப் பறவை, தன் வாழ்நாள் முடியும் வேளையில், தனக்கென கூடு ஒன்றைக் கட்டி அதற்குள் அமர்ந்துகொண்டு, தன் கூட்டுக்குத் தீ மூட்டும். தீயில் எரிந்து அந்தப் பறவை சாம்பலாகும்போது, அதன் அடுத்தத் தலைமுறையான பறவை வெளிவரும் என்பது பாரம்பரியக் கதை. இப்படி ஒரு பறவை இருந்தததா, இல்லையா என்ற ஆராய்ச்சிகளை விலக்கிவிட்டு சிந்தித்தால், கற்பனையில் பார்க்க அழகான ஒரு காட்சி இது. நெருப்புக்குள் நிகழும் புதுமைகள் தான் எத்தனை எத்தனை! நெருப்பை, அழிக்கும் கருவியாகப் பார்த்து பழகிவிட்டதால், பல சமயங்களில் இந்த நெருப்புக்குள் நிகழும் புதுமைகளை நாம் மறந்துபோக வாய்ப்புண்டு.

தீயில் இடப்படும் பொன் இன்னும் கூடுதலாக மின்னுவதைப்போல், தன்னையே தீயிட்டு கொளுத்திக்கொள்ளும் Phoenix பறவை மறுபிறவி எடுத்து வருவதுபோல், இந்த தவக்காலமும், அங்கு நாம் மேற்கொள்ளும் முயற்சிகளும் நம்மை புதுப்பிறப்பாக மாற்றவேண்டும். நம்மைப் புடமிட்டு மெருகேற்ற வேண்டும்.

தவக்காலத்தின் துவக்கநாளான திருநீற்றுப் புதனன்று நாம் பயன்படுத்தும் அடையாளமான சாம்பலையும் நாம் அழிவுடன் தொடர்புபடுத்துகிறோம். சாம்பல், உயிர் வளர்க்கும் உரமாகப் பயன்படுவதையும் நினைத்துப் பார்க்கவேண்டும். பொன்னைப் புடமிட நெருப்பு பயன்படுவது போல், இன்னும் பல உலோகங்களை சுத்தமாக்க சாம்பலும் பயன்படுகிறது இல்லையா? நெருப்பு, சாம்பல், Phoenix பறவை, வசந்தம் என்ற எண்ணங்களோடு நம் தவக்கால முயற்சிகள் ஆரம்பமாகட்டும்.

எந்த ஒரு முயற்சியுமே நம்பிக்கை இருந்தால் மட்டுமே மேற்கொள்ளப்படும். ஒலிம்பிக் போட்டிகளில் உசேன் போல்ட் என்ற தடகள வீரர் பெற்ற தங்கப் பதக்கங்களையும், நீச்சல் போட்டிகளில் Michael Phelps என்ற வீரரின் உலக சாதனைகளையும் செய்திகளாகப் பார்த்தோம், கேட்டோம். போட்டிகளின்போது கிடைக்கும் புகழ், ஆரவாரம் இவற்றின் பின்னணியில் அந்த வீரர்கள் பல ஆண்டுகளாய் தங்களையே வருத்தி மேற்கொண்ட கடினமான முயற்சியும், பயிற்சியும் கண்ணுக்குத் தெரியாத கடும்தவங்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.

உடல் பயிற்சி முயற்சி போலவே, தவ முயற்சிகளும் நம்பிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுபவை. பந்தயத்திற்கான பயிற்சிகளையும், நற்செய்தியை அறிவிக்க தேவையான தன்னடக்கம், தவ முயற்சி இவற்றையும் இணைத்து பவுல் அடியார் கூறும் அழகான வரிகள் இவை:

கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் 9: 24-27

பந்தயத்திடலில் ஓட வந்திருப்போர் பலர் ஓடினாலும், பரிசு பெறுபவர் ஒருவரே... பந்தயத்தில் போட்டியிடுவோர் யாவரும் அழிவுறும் வெற்றி வாகை சூடுவதற்காகத் தன்னடக்கப் பயிற்சிகளில் ஈடுபடுவர். நாமோ அழிவற்ற வெற்றி வாகை சூடுவதற்காக இப்படிச் செய்கிறோம்.

ஒவ்வொரு பயிற்சிக்கும் முயற்சிக்கும் வழிமுறைகள் உண்டு. தவக்கால முயற்சிகளுக்கும் நல்ல வழிமுறைகள் உண்டு. நாம் இந்த ஏழு வாரங்களிலும் இந்த வழி முறைகளைக் கற்றுக்கொள்ள கல்வாரிக்குச் செல்வோம். அங்கு, சிலுவையில் தொங்கியபடி தன் வாழ்வின் இறுதிப் போதனைகளை நடத்திய இயேசுவின் காலடியில் அமர்ந்து தவக்கால பாடங்களைப் பயில ஆரம்பிப்போம்.

இயேசு சிலுவையில் கூறியதாய் சொல்லப்படும் ஏழு வாக்கியங்களை நம் தவக்காலத்தின் பாடங்களாக எடுத்துக்கொள்வோம். இந்த வாக்கியங்களைச் சிந்திப்பதற்கு முன், இந்த வாக்கியங்களை சொன்ன அந்தச் சூழலைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போம்.

எந்த ஒரு மனிதனும் சாகப்போகும் நேரத்தில் சொல்வதை மிகக் கவனமாகக் கேட்போம். மறு வாழ்வின் வாசலில் நிற்கும் அந்த மனிதரின் வார்த்தைகளில் ஆழமான அர்த்தங்கள் இருக்கும் என்று நம்புகிறோம். இறுதி மூச்சு போகும் வேளையில் அவர் சொல்வது மிக முக்கியமான ஒரு செய்தியாக இருக்கும் என்று நம்புகிறோம். அதுவும் இறக்கும் நிலையில் இருப்பவர் அதிக உடல் வேதனைப்படுகிறார் என்று தெரிந்தால், அந்நேரத்தில் தன் வேதனையையும் பொறுத்துக்கொண்டு அவர் சொல்லும் வார்த்தைகள், இன்னும் அதிக மதிப்பு பெறும். இயேசு வேதனையின் உச்சியில் அந்தச் சிலுவையிலிருந்து தவக்காலத்திற்குத் தேவையான பாடங்களைச் சொல்லித் தருகிறார்.

இயேசுவின் வேதனையைக் கொஞ்சமாகிலும் உணர முயல்வோம். உரோமையர்கள் கண்டுபிடித்த சித்ரவதைகளின் கொடுமுடியாக, சிகரமாக அவர்கள் கண்டுபிடித்தது சிலுவை மரணம். சிலுவையில் அறையப்பட்டவர்கள் எளிதில் சாவதில்லை. அணு அணுவாக சித்ரவதைபட்டு சாவார்கள். கைகளில் இரு ஆணிகளாலும், இரு கால்களையும் ஒரு சேரப் பிணைத்து, கணுக்கால்கள் வழியே செலுத்தப்பட்ட ஒரு நீளமான ஆணியாலும் உடல் சிலுவையோடு அறையப்பட்டிருந்ததால், உடல் தொங்கும். அந்த நிலையில் மூச்சுவிட முடியாமல் திணறுவார்கள். மூச்சு விடுவதற்கு உடல் பாரத்தை மேலே கொண்டுவர வேண்டியிருக்கும். அப்படி தங்கள் உடலை மேலே கொண்டு வருவதற்கு, அறைப்பட்டிருந்த கைகளையும் கால்களையும் பயன்படுத்த வேண்டியிருக்கும். இவ்வாறு, விடும் ஒவ்வொரு மூச்சுக்கும் மரண வேதனை அனுபவிப்பார்கள். ஒரு சிலர் இப்படி உயிரோடு போராடி எழுப்பும் மரண ஓலம் எருசலேம் நகருக்கும் கேட்கும் என்று விவிலிய ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். இந்த மரண ஓலத்தை நிறுத்தவே, அவர்கள் மூச்சடைத்து விரைவில் இறக்கட்டும் என்பதற்காகவே, அவர்கள் மீண்டும் மேலே எழுந்துவர முடியாதபடி அவர்கள் கால்களை முறித்துவிடுவார்கள். இதையே நாம் நற்செய்தியில் வாசிக்கிறோம்.

இந்த மரண ஓலத்தில், வேதனைக் கதறலில் சிலுவையில் அறையப்பட்டவர்கள் சொல்லும் வார்த்தைகள் எல்லாம் வெறுப்புடன் வெளிவரும். தங்களை இந்த நிலைக்குக் கொண்டு வந்த தங்களை, பிறரை, தங்கள் கடவுள்களைச் சபித்துக் கொட்டும் வார்த்தைகளே அங்கு அதிகம் ஒலிக்கும். அப்படிப்பட்ட ஒரு வேதனையின் கொடுமுடியிலும், தான் விடும் ஒவ்வொரு மூச்சுக்கும் மரண போராட்டம் நிகழ்த்தி வந்த இயேசு சிலுவையில் சொன்ன வார்த்தைகள் அவரது மரண சாசனம். அந்த மரண சாசனத்தின் முதல் வரிகள் இவை: "தந்தையே, இவர்களை மன்னியும். தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை." (லூக்கா 23:34)

தவக்காலத்தில் நாம் மேற்கொள்ளும் பல முயற்சிகளுக்கு, அடிப்படையாக நமக்குத் தேவையானது, மன்னிப்பு. மன்னிப்பு பெறுவது, மன்னிப்பு வழங்குவது. இந்த கருத்துக்களை வரும் விவிலியத் தேடலில் சிந்திப்போம். நாம் ஆரம்பித்துள்ள இந்த தவக்காலம், புதுமைகளால், புதிய வாழ்வளிக்கும் வசந்தத்தால் நம்மை நிறைக்க வேண்டுமென ஒருவர் ஒருவருக்காய் வேண்டிக்கொள்வோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.