2015-02-26 15:50:00

அமெரிக்கா சிந்திக்கும் தாக்குதல் குறித்து ஆயர்களின் மடல்


பிப்.26,2015 கட்டுக்கடங்காத வன்முறைகளில் ஈடுபடும் குழுக்களிடமிருந்து, சிறுபான்மை மதத்தினரையும், ஏனைய மக்களையும் காப்பதற்கு சக்திமிகுந்த வழிகளைப் பயன்படுத்துவது நியாயமானதென்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ள கருத்துக்களை, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவை, அந்நாட்டு அரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ள மடலில் குறிப்பிட்டுள்ளது.

லிபியா நாட்டுக் கடற்கரையில், ISIS தீவிரவாதிகளால் 21 காப்டிக் கிறிஸ்தவர்கள், கொடூரமாகக் கொலையுண்டதையடுத்து, அமெரிக்க அரசுத் தலைவர் பாரக் ஒபாமா அவர்கள், தீவிரவாதிகளுக்கு எதிராகத் தாக்குதல்கள் மேற்கொள்ள அமெரிக்க பாராளு மன்றத்தின் ஆலோசனையைத் தேடி வருகிறார்.

இச்சூழலில், பிப்ரவரி 23, கடந்த திங்களன்று அமெரிக்க அரசுத் தலைவருக்கு, அமெரிக்க ஆயர்களின்  சார்பில், ஆயர் பேரவைத் தலைவர், பேராயர் Joseph Kurtz அவர்கள் மடல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அமெரிக்க ஐக்கிய நாடு, மத்தியகிழக்குப் பகுதியில் இராணுவத் தாக்குதல்களை மேற்கொள்ளும்போது, மனிதாபிமான உணர்வுகளுடன் பன்னாட்டு அரசுகள் எடுத்துள்ள வரைமுறைகளுக்கு உட்பட்டு தாக்குதல்கள் நடைபெறவேண்டும் என்று ஆயர்களின் மடல் வலியுறுத்துகிறது.

அமெரிக்காவின் தலையீடு, வெறும் இராணுவத் தாக்குதல்களாக மட்டும் அமைந்துவிடாமல், துன்புறும் மக்களின் துயர் துடைக்கும் பணிகளிலும் உதவும் வகையில் அமையவேண்டும் என்று ஆயர்கள் விண்ணப்பித்துள்ளனர். 

ஆதாரம் : ICN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.