2015-02-26 15:38:00

இந்தியத் திருஅவை 60,000த்திற்கும் அதிகமான முதியோருக்குப் பணி


பிப்.26,2015 சாதி, மதம் என்ற பாகுபாடுகள் ஏதுமின்றி, இந்திய கத்தோலிக்கத் திருஅவை, ஒவ்வொரு நாளும் 60,000த்திற்கும் அதிகமான வயது முதிர்ந்தோருக்குப் பணியாற்றி வருகிறது என்று இந்திய கத்தோலிக்க மருத்துவர் ஒருவர் கூறினார்.

"வயது முதிர்ந்தோருக்கு உதவுதல் மற்றும் உடல்துன்பத்தில் பேணுதல்" என்ற தலைப்பில், வருகிற மார்ச் மாதம் 5ம் தேதி முதல் 7ம் தேதி முடிய வத்திக்கானில் கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதைக் குறித்து, ஆசிய செய்திக்கு அளித்த பேட்டியொன்றில், மும்பையைச் சேர்ந்த கத்தோலிக்க மருத்துவர் Pascoal Carvalho அவர்கள் இவ்வாறு கூறினார்.

இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ள 'வாழ்வுக்கு ஆதாரமாகச் செயலாற்றும் பாப்பிறை அறக்கட்டளை'யின் உறுப்பினராகப் பணியாற்றும் மருத்துவர் Carvalho அவர்கள், இந்தியாவுக்கு மிகவும் தேவையான கருத்துக்கள் இக்கருத்தரங்கில் பேசப்படும் என்று கூறினார்.

இந்தியாவில், 1901ம் ஆண்டு, 1 கோடியே 21 இலட்சம் என்ற அளவில் இருந்த முதியோரின் எண்ணிக்கை, 2001ம் ஆண்டு 7 கோடியே 70 இலட்சமாக உயர்ந்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய மருத்துவர் Carvalho அவர்கள், இம்முதியோரில் 30 விழுக்காட்டினர், மருத்துவ உதவிகள் எளிதில் கிடைக்காத கிராமப்புறங்களில் வாழ்கின்றனர் என்றும் கூறினார்.

இந்தியாவில் 18,500 முதியோர் இல்லங்கள் வழியாகவும், 1700 சிறு மருத்துவ மனைகள் வழியாகவும், இந்திய கத்தோலிக்க சமுதாயம், 60,000த்திற்கும் அதிகமான முதியோருக்கு பணியாற்றுகின்றனர் என்றும் மருத்துவர் Carvalho அவர்கள், தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.