2015-02-26 15:33:00

பேரிடர்களால் ஆசிய பசிபிக் பகுதியில் 8 கோடிப் பேர் பாதிப்பு


பிப்.26,2015 நடந்து முடிந்த 2014ம் ஆண்டில் உருவான இயற்கைப் பேரிடர்களில் ஆசிய பசிபிக் பகுதியில் வாழும் 8 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டனர் என்று ஐ.நா. அறிக்கை ஒன்று கூறுகிறது.

"2014: ஆசியா, பசிபிக் பகுதிகளில் இயற்கைப் பேரிடர்" என்ற தலைப்பில், ஐ.நா.வின் பொருளாதார, சமூகத் தொடர்பு அவை, இப்புதனன்று வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஆண்டு உலகைத் தாக்கிய 226 இயற்கைப் பேரிடர்களில் பாதிக்கும் மேற்பட்டவை ஆசிய, பசிபிக் பகுதிகளில் நிகழ்ந்தன என்று கூறப்பட்டுள்ளது.

உயிர் பலிகள் என்ற அளவில், 2013ம் ஆண்டில் ஏற்பட்ட 18,744 என்ற அளவு, கடந்த ஆண்டு 6,000 என்ற அளவு குறைந்திருந்தாலும், இப்பேரிடர்களால் மக்கள் 6000 கோடி டாலர்கள் மதிப்புள்ள சொத்துக்களை இழந்துள்ளனர் என்றும் இவ்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

இந்தியாவில் வீசிய HudHud புயலால், 1100 கோடி டாலர்கள் மதிப்புள்ள அழிவும், சீனாவின் Ludian பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 600 கோடி டாலர்கள் மதிப்புள்ள அழிவும் உருவானதென்று இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆசிய பசிபிக் பகுதி நாடுகள், வருகிற மார்ச் மாதம் ஜப்பான் நாட்டில் மேற்கொள்ளும் கூட்டத்தின்போது, இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் வழிமுறைகளையும், பேரிடர் நேரங்களில் மக்களிடம் மன உறுதியை வளர்க்கும் வழிகளையும் அரசுகள் ஆலோசனை செய்யவேண்டும் என்று ஐ.நா. அறிக்கை பரிந்துரைக்கிறது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.