2015-02-28 15:34:00

ஒவ்வொரு நாளும் இயேசு நமக்காக இறைவனிடம் பரிந்து பேசுகிறார்


பிப்.28,2015. “ஒவ்வொரு நாளும் இயேசு நமக்காக இறைவனிடம் பரிந்து பேசுகிறார்; எனவே, ஆண்டவரே, என்மீது இரக்கம் வையும்; எனக்காகப் பரிந்து பேசும்! எனச் செபிப்போம்” என்ற வார்த்தைகளை இச்சனிக்கிழமையன்று தனது டுவிட்டரில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், ஸ்காட்லாந்து மறைசாட்சி இயேசு சபை அருள்பணியாளர் புனித John Ogilvie அவர்கள் கொல்லப்பட்டதன் நான்காம் நூற்றாண்டு பெருவிழா நிகழ்வுகளில் தனது பிரதிநிதியாக கலந்துகொள்வதற்கு, கர்தினால் கோர்மாக் மர்ஃபி ஒக்கானர் அவர்களை நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கிளாஸ்கோவில் வருகிற மார்ச் 9, 10 தேதிகளில் நடைபெறும் நிகழ்வுகளில் இங்கிலாந்தின் வெஸ்ட்மின்ஸ்டர் பேராயர் கர்தினால் ஒக்கானர் அவர்கள், திருத்தந்தையின் பிரதிநிதியாக கலந்துகொள்வார்.

1579ம் ஆண்டில் ஸ்காட்லாந்தில் பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்த புனித John Ogilvie அவர்கள், Presbyterian கிறிஸ்தவ சபையிலிருந்து கத்தோலிக்கத்துக்கு மனம் மாறியவர். தனது 17வது வயதில் இயேசு சபையில் சேர்ந்த இவர், இங்கிலாந்து அரசர் முதலாம் ஜேம்ஸ் அவர்களை திருஅவையின் தலைவராக ஏற்க மறுத்தார். இதனால் அரச துரோகி எனக் குற்றம் சாட்டப்பட்டு 1615ம் ஆண்டு மார்ச் 10ம் தேதி தூக்கிலிடப்பட்டார் புனித John Ogilvie.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.