2015-02-28 16:03:00

கைபேசிகளில் சப்தமாக இசையைக் கேட்பதால் செவித்திறனுக்கு ஆபத்து


பிப்.28,2015. பாடல்களைச் சப்தமாக கேட்பதால் உலகில் இலட்சக்கணக்கான இளையோர் செவித்திறனை இழக்கும் ஆபத்தை எதிர்கொள்கின்றனர் என்று உலக நலவாழ்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.

நடுத்தர மற்றும் அதிக வருவாய் உள்ள நாடுகளில் இந்நிறுவனம் எடுத்த ஆய்வின்படி,  12க்கும் 35 வயதுக்கும் உட்பட்டவர்களில் ஏறக்குறைய பாதிப்பேர் தங்களின் கைபேசிகளிலும், பிற இசைக் கருவிகளிலும் ஒலியின் சப்தத்தை மிக அதிகமாக வைத்து கேட்கின்றனர் எனத் தெரிய வந்துள்ளது.

இந்நிலை குறித்து எச்சரித்துள்ள உலக நலவாழ்வு நிறுவனம், இதனால் இவர்களின் கேட்கும்திறன் பாதிக்கப்படும் என்று கூறியது.

எட்டு மணி நேரத்துக்கு 85 decibelக்கு மேலும், 15 நிமிடங்களுக்கு 100 decibelலுக்கு மேலும் ஒலியின் திறன் இருந்தால் ஆபத்து அதிகம் என்றும், ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்துக்குமேல் தங்களின் தனிப்பட்ட இசைக் கருவிகளில் இசையைக் கேட்காமல் இருப்பது நல்லது என்றும் பரிந்துரைத்துள்ளது ஐ.நா.வின் நலவாழ்வு நிறுவனம்.

ஆதாரம் : UN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.