2015-02-28 16:18:00

நேபாளம்-உள்நாட்டுப்போர் குற்றவாளிகளுக்கு மன்னிப்பு மறுப்பு


பிப்.28,2015. உள்நாட்டுப் போரின்போது மனித உரிமைகளைக் கடுமையாய் மீறிய குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்குவதற்கு நேபாள நீதி சார்ந்த சட்டவிதியில் உள்ள நிபந்தனைகளை இரத்து செய்துள்ளது நேபாள உச்ச நீதிமன்றம்.

நீதியின் கோட்பாடுகள், அரசியல் அமைப்பிலுள்ள கட்டுப்பாட்டு விதிகள், அனைத்துலக சட்டம், நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகள் ஆகியவற்றுக்கு எதிராக மனித உரிமைமீறல் குற்றவாளிகள் செயல்படுகிறார்கள் என்று சொல்லி, இக்குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கும் சலுகையை இரத்து செய்துள்ளது நேபாள உச்ச நீதிமன்றம்.

உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்ட 234 பேர், 2014ம் ஆண்டு ஜூனில் பதிவு செய்த வழக்கை விசாரித்த நேபாள உச்ச நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது.

நேபாள அரசும், உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை மதித்து நடப்பதாக உறுதியளித்துள்ளது.

1996க்கும் 2006ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நேபாள மாவோயிஸ்ட் புரட்சியாளர்களுக்கும், அரசின் பாதுகாப்புப் படைக்கும் இடையே நடந்த சண்டையில் 17 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 1300 பேர் காணாமல் போயுள்ளனர்.

ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.