2015-03-03 15:07:00

அமேசான் பகுதி மக்களின் வாழ்வைப் பாதுகாப்பதற்கு REPAM அமைப்பு


மார்ச்,03,2015. “இதயம் அன்பு செலுத்தாதபோது அது கடினமடைகின்றது. ஆண்டவரே, அன்புசெலுத்தத் தெரிந்த இதயத்தை எங்களுக்கு அளித்தருளும்” என்ற வார்த்தைகளை தனது டுவிட்டரில் இச்செவ்வாயன்று பதிவு செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்

மேலும், அமேசான் பருவமழைக் காடுகள் பகுதியைப் பாதுகாக்கும் திருஅவையின் REPAM என்ற கூட்டமைப்பு, தனது நடவடிக்கைகள் குறித்து, திருப்பீட பத்திரிகை அலுவலகத்தில் இச்செவ்வாயன்று செய்தியாளர்களுக்கு விளக்கியது.

திருப்பீட நீதி மற்றும் அமைதி அவைத் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன்,  இலத்தீன் அமெரிக்க ஆயர் பேரவையின் நீதி மற்றும் ஒருமைப்பாட்டு அவைத் தலைவர் பேராயர் Pedro Ricardo Barreto Jimeno ஆகியோர் அடங்கிய குழு செய்தியாளர்களுக்கு விளக்கியது.

பெருமளவான சுரங்கத் திட்டங்கள், வெப்பநிலை மாற்றம், பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் போன்றவற்றால், அமேசான் பகுதியும், அம்மக்களின் கலாச்சாரமும் அழிந்து வருகின்றன என்று பேராயர் Barreto கூறினார்.

இம்மக்களின் வாழ்வைப் பாதுகாப்பதன் மூலம் அவர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ்வதற்கு உதவும் நோக்கத்தில் REPAM அமைப்பு உருவாக்கப்பட்டது எனவும் விளக்கினார் பேராயர் Barreto.

உலகில் மிகப் பெரிய வெப்பமண்டல காட்டுப் பகுதியாகிய அமேசான், அறுபது இலட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டது. இது, Guyana, Suriname, French Guyana, Venezuela, Ecuador, Colombia, Bolivia, Peru, Brazil ஆகிய நாடுகளை உள்ளடக்கியது. அமேசான் காடுகளில் 390 பூர்வீக இனங்களைச் சேர்ந்த 2,779,478 பூர்வீக இன மக்களும், 137 தனித்து வாழும் (யாரோடும் தொடர்பில்லாத) பூர்வீக மக்களும் உள்ளனர். இவர்கள், 240 மொழிகளைப் பேசுகின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.