2015-03-11 17:27:00

கடுகு சிறுத்தாலும்.... : பிரச்சினைகளை சமாளிக்க பல வழிகள்


ஒரு நிறுவனத்தின் மேலாளராக புதிதாக ஒருவர் சேர்ந்தார். அங்கிருந்து மாறுதலாகி செல்பவர் அனுபவம் வாய்ந்தவர். எனவே புதியவர் அவரிடம் திறமையான நிர்வாகம் பற்றி சில ஆலோசனைகள் கேட்டார். அவர் உடனே புதியவரிடம் மூன்று காகித உறைகளைக் கொடுத்து ”உங்களுக்கு எப்போது பிரச்சனை வருகிறதோ அப்போது மட்டும் ஒவ்வொன்றாகத் திறந்துப் பார்த்துக் கொள்ளவும். அதில் உங்கள் பிரச்சனைக்கு தீர்வு இருக்கும்,” என்று சொன்னார். புதியவர் அவருக்கு நன்றி கூறி மூன்று உறைகளையும் வாங்கி வைத்துக் கொண்டார்.

ஒரு மாதத்திலேயே அவருக்கு தொழிலாளர்களிடமிருந்து ஒரு நெருக்கடி வந்தது. உடனே முதல் உறையை எடுத்து திறந்து படித்தார். அதில், “நான் புதியவன். எனவே எனக்கு சிறிது கால அவகாசம் வேண்டும் என்று கேட்கவும்” என்று எழுதியிருந்தது. அதேபோல் அவரும், “நான் இப்போதுதானே வந்திருக்கிறேன். நிறுவனத்தைப் பற்றி முழுமையாக அறிந்தால்தானே எதுவும் செய்ய முடியும்.” என்றார். வந்தவர்களும் அது நியாயம் எனக் கருதி சென்று விட்டனர். அடுத்த ஓர் ஆண்டில் மறுபடியும் பிரச்சனை வந்தது. இரண்டாவது உறையைத் திறந்து பார்த்தார். அதில், “முன்பு மேலாளர்களாய் இருந்தவர்களைக் குறை சொல்” என்றிருந்தது. உடனே அவரும் “பாருங்கள், நான் என்ன செய்வது? இந்த நிறுவனத்தை முன்னேற்ற நான் இரவு பகலாக சிந்தித்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால் இங்கு முன்பு பணி புரிந்தவர்கள் என்னதான் வேலை பார்த்தார்களோ தெரியவில்லை. எதை எடுத்தாலும் ஒரே குப்பை. இதை சீர் செய்யவே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது” என்று சொன்னார்.  

வந்தவர்களும் என்ன சொல்வது என்று தெரியாமல் சென்று விட்டார்கள்.

அவர் வந்து இரண்டு ஆண்டுகள் கடந்தபின் ஒருநாள், தொழிலாளர் தலைவர்கள் பெரும் பிரச்சனையுடன் வந்தார்கள். இவருக்கு எப்படி சமாளிப்பது என்ற பயம் வந்துவிட்டது. உடனே மூன்றாவது உறையை எடுத்துப் படித்தார். அதில். “உனக்கு அடுத்து வருபவருக்கு மூன்று உறைகளைத் தயார் செய்து வைக்கவும்” என்று எழுதப்பட்டிருந்தது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.