2015-03-18 16:19:00

புனித குழந்தை தெரேசாவின் பெற்றோரும் புனிதர்கள் - திருத்தந்தை


மார்ச்,18,2015. Lisieux நகர், குழந்தை இயேசுவின் புனித தெரேசா அவர்களின் பெற்றோர், லூயிஸ் மார்ட்டின், மரியா மார்ட்டின் இருவரையும் புனிதர்களென உயர்த்தும் அறிக்கையை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இப்புதனன்று வெளியிட்டார்.

புனித படிநிலைகள் பேராயத்தின் தலைவர் கர்தினால் ஆஞ்செலொ அமாத்தோ அவர்களை, இப்புதன் காலை, திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, தம்பதியரான லூயிஸ் மார்ட்டின், மரியா மார்ட்டின் ஆகியோரின் பரிந்துரையால் நிகழ்ந்த ஒரு புதுமையை அங்கீகரித்து, இவ்விருவரையும் புனிதர்களாக உயர்த்தும் அறிக்கையை வெளியிட்டார்.

மேலும், இப்பேராயம் பரிந்துரைத்த இறையடியார்கள் ஐந்து பெண்கள் மற்றும் இரு ஆண்கள் ஆகியோரின் வீரத்துவமான புண்ணிய வாழ்வை அங்கீகரித்து, அவர்கள், புனிதர்படி நிலைகளுக்கு உரியவர்கள் என்று திருத்தந்தை ஏற்றுக்கொண்டார்.

இந்த எழுவரில் ஐவர் பெண்கள், மற்றும் இருவர் ஆண்கள். மற்றும், இவர்களில் Pietro Barbarić என்பவர், 23 வயது நிறைந்த இயேசு சபை நவதுறவி என்பதும், Maria Orsola Bussone என்பவர், 16 வயது நிறைந்த இளம்பெண் என்பதும் குறிப்பிடத்தக்கவை.

இந்த எழுவரின் விவரங்கள் பின்வருமாறு:

இத்தாலியின் நேப்பிள்ஸ் நகரில் பிறந்த, Francesco Gattola அவர்கள், Suore Figlie della Santissima Vergine Immaculata of Lourdes என்ற துறவு சபையை உருவாக்கிய அருள்பணியாளர்.

Bosnia Herzegovinaவில் பிறந்த Pietro Barbarić, இயேசு சபை நவ துறவியாக, தன் 23ம் வயதில் இறையடி சேர்ந்தார்.

அயர்லாந்தில் பிறந்த Mary Aikenhead அவர்கள், அயர்லாந்தில், பிறரன்பு அருள் சகோதரிகள் சபையை உருவாக்கியவர்.

இத்தாலியில் பிறந்த Elisabetta Baldo அவர்கள், ஒரு கைம்பெண். இவர், Umili Serve del Signore என்ற துறவு சபையை உருவாக்கியவர்களில் ஒருவர்.

Benedictine Samaritan Sisters of the Cross of Christ என்ற துறவு சபையை உருவாக்கிய Edvige Jaroszewska அவர்கள், Vincenza of the Passion of the Lord என்ற பெயரை தன் துறவு வாழ்வில் ஏற்று, போலந்து நாட்டில் தன் 37வது வயதில் இறையடி சேர்ந்தார்.

ஸ்பெயின் நாட்டில் பிறந்த Giovanna Vázquez Gutiérrez என்பவர், புனித பிரான்சிஸ் மூன்றாம் சபையில் இணைந்து, சபையின் துறவு மடத் தலைவியாக பணியாற்றியவர்.

இத்தாலியில் பிறந்து, Focolare இயக்கத்தில் இணைந்த Maria Orsola Bussone என்ற இளம்பெண், தன் 16வது வயதில் இறையடி சேர்ந்தார்.

இந்த ஏழு இறையடியார்களும் திருத்தந்தையின் அங்கீகாரத்திற்குப் பின், வணக்கத்திற்குரியவர்கள் என்று இனி வழங்கப்படுவர்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.