2015-03-21 15:40:00

அத் லிமினாவின்போது திருத்தந்தையை சந்தித்த அனுபவம்


மார்ச்,21,2015. உள்ளூர் நிலைமையை அடிப்படையாக வைத்து தீர்மானங்கள் எடுக்க வேண்டியது ஒவ்வோர் ஆயரின் கடமை என்பதை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தங்களுக்கு நினைவுபடுத்தியதாகத் தெரிவித்தார் ஜப்பான் ஆயர் ஒருவர்.

ஆயர்களின் அத் லிமினா சந்திப்பை முன்னிட்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்த அனுபவத்தை ஆசியச் செய்தி நிறுவனத்திடம் பகிர்ந்துகொண்ட ஜப்பான் நாட்டின் Niigata ஆயர் Tarcisio Isao Kikuchi அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்.

ஜப்பானின் 16 ஆயர்களும் ஒன்றாகச் சந்தித்து மறைப்பணியில் தாங்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் மற்றும் பிற அனுபவங்களை திருத்தந்தை கேட்டதாகவும், ஆயர்கள் ஒவ்வொருவரும் பகிர்ந்துகொண்டதை திருத்தந்தை கவனமுடன் செவிமடுத்ததாகவும் கூறினார் ஆயர் Kikuchi.

ஜப்பானில் இறையழைத்தல், கத்தோலிக்க கல்வி, குடியேற்றதாரருக்கு மறைப்பணி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமுதாயப் பணி என பல தலைப்புகள் பற்றி ஆயர்களிடம் திருத்தந்தை கேள்விகள் கேட்டுத் தெரிந்து கொண்டார் என்றும் கூறினார் ஆயர் Kikuchi.

நாகசாகியில் மறைந்து வாழ்ந்த கிறிஸ்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதன் 150ம் ஆண்டு நிறைவை இவ்வாண்டு ஜப்பான் திருஅவை சிறப்பிப்பதால் ஜப்பானில் கிறிஸ்தவத்தின் வரலாறு பற்றி மிகுந்த ஆர்வத்துடன் திருத்தந்தை கேட்டதாகவும் ஆயர் Kikuchi      அவர்கள் கூறினார்.

இச்சந்திப்பு ஓர் ஆசிர்வாதமாகவும் ஊக்கமூட்டுவதாகவும் இருந்தது, ஜப்பானுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் குறித்து திருத்தந்தை சிந்தித்து வருகிறார் எனவும் பகிர்ந்துகொண்டார் ஜப்பான் ஆயர் Kikuchi.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.