2015-03-27 15:19:00

சிரியா,ஈராக் சண்டைகள் அகதிகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளன


மார்ச்,27,2015. சிரியாவிலும், ஈராக்கிலும் இடம்பெறும் சண்டைகள் உட்பட உலகில் இடம்பெறும் ஆயுதம் ஏந்திய மோதல்கள், மனித உரிமை மீறல்கள், மோசமடைந்துவரும் மனிதாபிமான நிலைகள் போன்றவை, கடந்த 22 ஆண்டுகளில் மேற்குலகில் தஞ்சம் கோருவோரின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளன என்று ஐ.நா.வின் புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.

1992ம் ஆண்டில் போஸ்னியா-எர்செகொவினாவில் சண்டை தொடங்கியதிலிருந்து தொழில்வளர்ச்சியடைந்த நாடுகளில் தஞ்சம் கோரும் அகதிகளின் எண்ணிக்கை சென்ற ஆண்டு ஐம்பது விழுக்காடு அதிகரித்து எட்டு இலட்சத்து அறுபதாயிரத்தைத் தாண்டியுள்ளதாக ஐ.நா. அகதிகள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.

“2014ம் ஆண்டில் தஞ்சம் கோரி விண்ணப்பித்தவர் நிலவரம்” என்ற தலைப்பில் ஜெனீவாவில் இந்த அறிக்கையை வெளியிட்டுப் பேசிய ஐ.நா. அகதிகள் அமைப்பின் தலைவர் António Guterres அவர்கள், சிரியாவிலும் ஈராக்கிலும் நடந்துவரும் மோதல்களே இந்த அதிகரிப்புக்குக் காரணம் எனத் தெரிவித்தார்.  

சிரியா, ஈராக் நாடுகளுக்கு அடுத்தபடியாக, ஆப்கானியர்கள்தான் வளந்த நாடுகளில் அதிக அளவில் தஞ்சம் கோருவோர் என்றும் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் ஒரு இலட்சத்து எழுபத்து மூவாயிரம் விண்ணப்பங்களைப் பெற்ற ஜெர்மனிதான் உலகில் அதிக அளவில் தஞ்சக் கோரிக்கை விண்ணப்பங்களைப் பெற்ற நாடாக உள்ளது.

துருக்கி, லெபனான், ஜோர்டன் போன்ற நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள பல இலட்சம் பேர் இந்த அறிக்கை வெளியிட்டுள்ள எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.