2015-04-06 15:40:00

நவீன மனித வர்த்தகம் குறித்து உலகம் அறிய வேண்டும்


ஏப்.06,2015. நவீன மனித வர்த்தகம் குறித்த புள்ளி விபரங்கள் அதிர்ச்சியூட்டுகின்றன என்று கூறியுள்ள அதேவேளை, இந்நிலை குறித்து உலகினரின் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புவதாக அருள்சகோதரி ஒருவர் தெரிவித்தார்.

ஒவ்வோர் ஆண்டும் எட்டு இலட்சம் முதல் இருபது இலட்சம் பேர்வரை மனித வர்த்தகத்தில் ஈடுபடுத்தப்படுகின்றனர், இவர்களில் எண்பது விழுக்காட்டினர் பெண்களும் சிறுமிகளும் என்று அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களையும் குறிப்பிட்டார் கொம்போனி சபை அருள்சகோதரி Gabriella Bottani. 

மனித வர்த்தகத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு உழைக்கும் அனைத்துலக அருள்சகோதரிகள் அமைப்பான தலித்தா கும் என்ற அமைப்பின் புதிய ஒருங்கிணைப்பாளரான அருள்சகோதரி Bottani அவர்கள், வாஷிங்டனில் அளித்த பேட்டியொன்றில் நவீன மனித வர்த்தகத்தின் பல்வேறு முகங்கள் குறித்து விளக்கினார்.

பாலியலுக்குப் பயன்படுத்தப்படுவது, கட்டாய வேலை, வீட்டுக் கொத்தடிமை, உடல் உறுப்புகளை அகற்றல், கட்டாயத் திருமணம் என நவீன மனித வர்த்தகத்தின் பல்வேறு முகங்களையும் விளக்கிய அருள்சகோதரி Bottani அவர்கள், இன்றைய உலகம் இந்நிலையைக் களைவதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : CNS /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.