2015-04-21 15:41:00

தினமும் 2000 ஆயுதங்கள் மெக்சிகோவுக்கு கடத்தப்படுகின்றன


ஏப்.21,2015. மெக்சிகோ அரசு ஆயுதங்கள் குறித்த சட்டத்தை விவாதித்துவரும்வேளை குடிமக்களும் இவ்விவகாரம் குறித்து சிந்திக்குமாறு மெக்சிகோ உயர்மறைமாவட்டம் கேட்டுள்ளது.

மெக்சிகோவில் 2012க்கும், 2014ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நாற்பதாயிரத்துக்கு மேற்பட்ட கொலைகளுக்குப் போதைப்பொருள் வணிகமும், தூக்குத்தண்டனையும், சண்டையும், தாக்குதல்களும் காரணங்கள் என்ற புள்ளி விபரங்களையும் சுட்டிக்காட்டியுள்ளது மெக்சிகோ உயர்மறைமாவட்டம்.

அந்நாட்டில் ஒரு கோடியே 40 இலட்சத்துக்கு மேற்பட்ட ஆயுதங்கள் புழக்கத்தில்  உள்ளதையும், ஒவ்வொரு நாளும் 2000 ஆயுதங்கள் வீதம் அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்து மெக்சிகோவுக்குக் கடத்தப்படுவதையும் குறிப்பிட்டுள்ளது அவ்வுயர்மறைமாவட்டம்.

மெக்சிகோ உயர்மறைமாவட்ட "Desde la Fe" என்ற வார இதழில் ஆயுதங்கள் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள தலையங்கத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

ஆயுத வர்த்தகம் அதிகமான ஆதாயம் அளிக்கின்ற வணிகங்களில் ஒன்றாகவும், உலகெங்கும் ஆயுதங்கள் பரவுவதற்கு, அவற்றின் உற்பத்தியில் அமெரிக்க ஐக்கிய நாடு முதலிடத்தில் உள்ளது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

உலகில் பரவியுள்ள ஆயுதங்களில் முப்பது விழுக்காடு அமெரிக்க ஐக்கிய நாட்டில் தயாரிக்கப்பட்டவை என்றும், மெக்சிகோவைக் கடுமையாய்ப் பாதிக்கும் பிரச்சனையாக   சிறிய ஆயுத வர்த்தகம் உள்ளது என்றும் அத்தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.