2015-04-22 16:50:00

பாலஸ்தீன-இஸ்ரேல் பேச்சுவார்த்தை நிலை குறித்து கவலை


ஏப்.22,2015. பாலஸ்தீனாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றமே காணப்படவில்லையென்று திருப்பீட அதிகாரி ஒருவர் இச்செவ்வாயன்று குறை கூறியுள்ளார்.

பாலஸ்தீன விவகாரம் உள்ளிட்ட மத்திய கிழக்கு விவகாரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு அவையில் இடம்பெற்ற பொது விவாதத்தில் இச்செவ்வாயன்று உரையாற்றிய, ஐ.நா.வுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் பெர்னதித்தோ அவுசா அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.

இஸ்ரேல் தனது பாதுகாப்பு குறித்து அக்கறை கொள்வது நியாயமானது மற்றும் சட்டமுறைப்படியானது எனினும், இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகள், தனது அண்டை நாடுகளிலிருந்து தன்னை தனிமைப்படுத்துவதாக இருக்கக் கூடாது என்பதையும் குறிப்பிட்டார் பேராயர் அவுசா.     

திருப்பீடமும், பன்னாட்டு சமுதாயமும் ஆதரவளிக்கும், இரு நாடுகள் தீர்வை அமல்படுத்துவதன் வழியாக, இஸ்ரேல் பாலஸ்தீனாவோடு அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, அண்டை நாடுகளுடன் ஒன்றிணைந்து வாழ  வேண்டுமென்ற விண்ணப்பத்தையும் முன்வைத்தார் பேராயர் அவுசா.

அமைதி நடவடிக்கையை மீண்டும் உயிர்த்துடிப்புள்ளதாக்கும் திட்டவட்டமான பேச்சுவார்த்தையை இஸ்ரேலும் பாலஸ்தீனாவும் தொடங்குமாறு உலகின் அமைதி ஆர்வலர்களோடு திருப்பீடமும் அழைப்பு விடுப்பதாகக் கூறினார் பேராயர் அவுசா.

மத்திய கிழக்கில் இன, மத அல்லது வேறு காரணங்களின் அடிப்படையில் இடம்பெறும் தாக்குதல்களையும், உரிமை மீறல்களையும் பேராயர் அவுசா அவர்கள் கடுமையாகக் கண்டித்துப் பேசினார்.   

ஆதாரம்  : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.