2015-04-24 16:08:00

Gallipoli தாக்குதலின் நூறாம் ஆண்டு நினைவுகள்


ஏப்,24,2015. முதலாம் உலகப் போரின்போது அதிகமான மனிதர்களின் இரத்தம் சிந்தப்பட்ட போர்க்களங்களில் ஒன்றான Gallipoli வளைகுடாப் பகுதியில் போர் தொடங்கியதன் நூறாம் ஆண்டு நிகழ்வுகள் தொடங்கப்பட்டுள்ளன.

Dardanelles கால்வாய்ப் பகுதியைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் நேசநாடுகளின் படைகளும் ஓட்டமான் படைகளும் 1915ம் ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி Gallipoliல் தாக்குதலைத் தொடங்கின. ஒன்பது மாதங்கள் நடைபெற்ற கடுமையான அத்தாக்குதலில் ஒரு இலட்சத்து 40 ஆயிரத்துக்கு அதிகமான படைவீரர்கள் உயிரிழந்தனர்.

அக்காலத்து ஓட்டமான் பேரரசின் தலைநகராகவும், தற்போதைய துருக்கியின் ஒரு பகுதியாகவும் உள்ள கான்ஸ்டாண்டிநோப்பிளைக் கைப்பற்றும் நோக்கத்தில், 1915ம் நேசநாடுகளின் படைகள், நிலம் மற்றும் நீர் மார்க்கமாக Gallipoli வளைகுடாப் பகுதியில் தாக்குதலைத் தொடங்கினர்.

இத்தாக்குதலில் ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து Anzac இராணுவத்தின் பத்தாயிரம் படைவீரர்கள் உயிரிழந்தனர். Anzac நாள் என ஆஸ்திரேலியா இதனை இச்சனிக்கிழமை நினைவுகூர்கின்றது. பிரிட்டனின் 3 இலட்சத்து 50 ஆயிரம் படைவீரரில் 35 ஆயிரம், பிரான்சின் 79 ஆயிரம் படைவீரரில் பத்தாயிரம், Anzacன் 74 ஆயிரம் படைவீரரில் பத்தாயிரம், துருக்கியின் 4 இலட்சம் படைவீரரில் 86 ஆயிரம் படைவீரர் உயிரிழந்தனர்.

அத்தாக்குதல் பேரழிவை ஏற்படுத்தியது எனினும், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் தேசிய உணர்வுகளை இது மேலோங்கச் செய்தது என்றும், அத்தாக்குதல் துருக்கிக்கும் ஒரு திருப்பு முனையாக அமைந்தது என்றும் கூறப்படுகின்றது.

அப்போதுதான் Mustafa Kemal Atatürk ஓர் இராணுவத் தளபதியாக முன்னிலைப் பெற்று புகழ் அடைந்தார். அதன் பின்னர் அவர் நவீன துருக்கிக் குடியரசையும் உருவாக்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.