2015-04-24 16:19:00

உறுதியான சமூகங்கள் உருவாக வாசிப்பும் எழுத்தறிவும் முக்கியம்


ஏப்.24,2015. சமூகங்களில் முன்னேற்றம் இடம்பெறும் இக்காலத்தில், சுதந்திரத்தையும் சகிப்புத்தன்மையையும் புறக்கணிக்கும் மனிதர்கள் எப்போதும் பள்ளிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துகின்றனர் என்று யுனெஸ்கோ நிறுவனம் குறை கூறியுள்ளது.

வாழ்வின் தரத்தை முன்னேற்றுவதற்கு புத்தகங்களின் வல்லமை உணரப்பட வேண்டும் என்றுரைத்த யுனெஸ்கோ நிறுவன இயக்குனர் இரினா பொக்கோவா அவர்கள், அண்மைய மாதங்களில் பள்ளிகளில் சிறார் தாக்கப்பட்டதையும், புத்தகங்கள் பொது இடங்களில் எரிக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டினார்.

ஏப்ரல் 23, இவ்வியாழனன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக புத்தக மற்றும் காப்புரிமை தினத்தன்று இவ்வாறு தெரிவித்த பொக்கோவா அவர்கள், எழுத்தறிவின்மை மற்றும் ஏழ்மைக்கெதிரான நடவடிக்கையில், எல்லாவிதமான வாசிப்பு மற்றும் எழுதும் திறமையை ஊக்குவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இன்று உலகில் 17 கோடியே 50 இலட்சம் வளர்இளர் பருவத்தினர் ஒரு வரிகூட வாசிக்க இயலாமல் உள்ளனர் என்றும் கூறினார் பொக்கோவா.

1995ம் ஆண்டில் யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்த உலக புத்தக மற்றும் காப்புரிமை தினம், ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 23ம் தேதியன்று 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பள்ளிகள், பொது நிறுவனங்கள் மற்றும் தனியார் அமைப்புக்களில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

1616ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதியன்று Cervantes, Shakespeare, Inca Garcilaso de la Vega ஆகியோர் இறந்தனர். மேலும், இதே ஏப்ரல் 23, Maurice Druon, Vladimir Nabokov, Manuel Mejía Vallejo போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பிறந்த அல்லது இறந்த நாளாகும்.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.