2015-04-25 15:37:00

இந்தியாவில் திருநங்கைகள் மசோதா நிறைவேறியது


ஏப்.25,2015.  இந்தியாவில் திருநங்கைகள் எதிர்நோக்கும் பாகுபாடுகளை முடிவுக்குக் கொண்டுவரவும், திருநங்கைகளின் உரிமைகளைப் பாதுகாக்கவுமென  மசோதா ஒன்று இவ்வெள்ளியன்று மாநிலங்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது குறித்துப் பேசிய மாநிலங்களவைத் துணைத் தலைவர் பி.ஜே.குரியன் அவர்கள்,  திருநங்கைகளின் உரிமைகளைப் பாதுகாக்க வகைசெய்யும் இந்தத் தனி நபர் மசோதா நிறைவேறியது மிக அரிதான ஒன்று என்று குறிப்பிட்டார்.

திருநங்கைகளுக்குத் தேசிய ஆணையமும், மாநில அளவில் ஆணையமும் அமைக்க வகை செய்யும் 'திருநங்கைகள் உரிமை மசோதா 2014' என்ற மசோதாவை மாநிலங்களவையில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா அவர்கள் கொண்டுவந்தார்.

அப்போது பேசிய சிவா அவர்கள், திருநங்கைகளின் உரிமைகளைப் பாதுகாக்க, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 29 நாடுகள் நடவடிக்கை எடுத்துள்ளன. ஆனால், இந்தியாவில் மட்டும் இல்லை என்றார்.

அனைவருக்கும் மனித உரிமை பற்றி பேசுகிறோம். ஆனால், சிலர் புறக்கணிக்கப்படுகின்றனர். பாலின அடையாளம் எதுவாக இருந்தாலும் அனைவருக்கும் மனித உரிமைகள் உள்ளன. வாழ்வின் அனைத்துப் பிரிவுகளிலும் திருநங்கைகளுக்கு அங்கீகாரம் அளித்து சமத்துவ சமுதாயம் ஏற்படுத்துவதற்கான சட்டம் ஏற்படுத்த தாக்கல் செய்ததாகவும் திருச்சி சிவா கூறினார்.

45 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது ஒரு தனிநபர் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் உச்ச நீதிமன்றம் கிரிமினல் மேல்முறையீட்டு வழக்கு விசாரணை அதிகார வரம்பை விரிவுபடுத்துதல் தொடர்பாக 1970ம் ஆண்டு ஒரு தனிநபர் மசோதா சட்டமாக நிறைவேற்றப்பட்டது.

ஆதாரம் : Agencies / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.