2015-05-09 15:41:00

உயிர்ப்புக்காலம் 6ம் ஞாயிறு - அன்னை தினம் - ஞாயிறு சிந்தனை


மே மாதம் 10ம் தேதி, இஞ்ஞாயிறன்று, அன்னை தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆஸ்திரேலியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் உட்பட, 80க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒவ்வோர் ஆண்டும் மே மாதம் இரண்டாம் ஞாயிறு, அன்னை தினமாகக் கொண்டாடப்படுகிறது. இஞ்ஞாயிறன்று கொண்டாடப்படும் அன்னை தினத்தை நம் ஞாயிறு சிந்தனையின் மையப் பகுதியாக்குவோம்.

இந்த நாளை ‘அன்னை தினம்’ என்று ஒருமையில் அழைப்பதா? ‘அன்னையர் தினம்’ என்று பன்மையில் அழைப்பதா? என்ற கேள்வி எழலாம். இத்தினத்தை அதிகாரப் பூர்வமான ஒரு நாளாக, அமெரிக்க அரசு அறிவிக்க வேண்டுமென்று பல வழிகளிலும் பாடுபட்ட Anna Jarvis என்ற பெண்மணி, இக்கேள்விக்குச் சரியான விடையளிக்கிறார்:

"இது அன்னை தினம்தான். அன்னையர் தினம் அல்ல. நம் ஒவ்வொருவரின் அன்னைக்கும் தனிப்பட்ட, சிறப்பான இடம் கொடுத்து, அவருக்கு நாம் செலுத்தும் காணிக்கை, இந்த நாள். ‘அன்னையர்’ என்ற பன்மை வடிவம் கொடுத்து, முகமற்ற ஒரு கருத்தைக் கொண்டாடும் நாள் இதுவல்ல" என்று அவர் ஆணித்தரமாகக் கூறியுள்ளார்.

தான் பாடுபட்டு உருவாக்கிய இந்த உன்னத நாள், சில ஆண்டுகளிலேயே வியாபார மயமாகிவிட்டதைக் கண்டு, Anna Jarvis அவர்கள், மிகவும் மனம் நொந்தார். வாழ்த்து அட்டைகள், மலர் கொத்துகள், இனிப்புகள், பரிசுகள் என்று, அன்னை தினம், வியாபாரத் திருநாளாக மாறிவிட்டதை நாம் மறுக்கமுடியாது. அதிலும் குறிப்பாக, நம்மைப் பெற்று, வளர்த்த அன்னையை நேரில் சென்று பார்க்கக்கூட மனமோ, நேரமோ இன்றி, தொலைபேசி, கணணி, தபால் வழியே அவர்களுக்கு வாழ்த்து சொல்வது, அன்னை தினத்தின் மிகப்பெரும் கொடுமை! இந்த வியாபாரப் பிடியிலிருந்து அன்னை தினத்தை விடுதலை செய்து, நம் ஒவ்வொருவரின் அன்னைக்கும் உரிய மதிப்பையும், அன்பையும் முகமுகமாக வழங்க வேண்டியது நம் கடமை!

இன்னும் மூன்று நாட்களில், அதாவது, மே 13ம் தேதி, பாத்திமா நகரில் மரியன்னை காட்சி தந்தத் திருநாள். பாத்திமா அன்னைத் திருநாளையும் அன்னை தினத்தையும் இணைத்து சிந்திக்கும்போது, நம்மைப் பேணி, காத்துவரும் அன்னை மரியாவையும், நமது அன்னையர் ஒவ்வொருவரையும் மனதார, மனதுருக எண்ணி, இறைவனுக்கு முதலில் நமது நன்றியைக் கூறுவோம்.

அம்மாவை, அன்னையை மையப்படுத்திய வழிபாடுகளும், விழாக்களும் மனித வரலாற்றில் பல பழமைக் கலாச்சாரங்களில் மதிப்புடன் கொண்டாடப்பட்டு வந்துள்ளன. ஆனால், நாளடைவில், ஆணாதிக்கச் சமுதாயம், அன்னைக்குத் தரவேண்டிய உயர்ந்த நிலையை மறுத்துவிட்டது. அன்னைக்கென வருடத்தின் ஒரு நாளை அர்ப்பணிக்கும் எண்ணத்தை 19ம் நூற்றாண்டில் வித்திட்டவர், சமூக ஆர்வலரும், கவிஞருமான Julia Ward Howe. இவர், 1870ம் ஆண்டு, சக்திவாய்ந்த ஒரு கவிதையை எழுதினார். "அன்னைதின அறைகூவல்" (Mother's Day Proclamation) என்ற பெயரில் வெளியான இந்தக் கவிதை, உலகெங்கும் அன்னை தினத்தைக் கொண்டாடும் எண்ணத்திற்கு வித்திட்டது. இக்கவிதை விவரிக்கும் பெண்மை, தாய்மை ஆகியப் பண்புகள், நமது இன்றைய உலகிற்கு மிகவும் தேவையான பாடங்களைச் சொல்லித் தருகின்றன. தாய், அன்னை, அல்லது அம்மா என்றதும் வீட்டுக்குள், அடுப்படியில் முடங்கிக்கிடக்கும் இயந்திரங்களாக அவர்களை எண்ணிப் பார்த்த காலத்தைக் கடந்து, சமுதாயத்தில் நல்ல முடிவுகளை எடுக்க, பெண்கள் வீட்டைவிட்டு வெளியேற வேண்டும்; அவர்களது மென்மை கலந்த உறுதி, உலகின் பிரச்சனைகளைத் தீர்க்கும் என்று, 19ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இக்கவிதை முழங்குகிறது. அமெரிக்காவின் உள்நாட்டுப் போர் நடந்த காலத்தில் எழுதப்பட்ட இக்கவிதை இதோ:

மகளிரே, இன்று எழுந்து நில்லுங்கள்! இதயமுள்ள மகளிரே, எதிர்த்து நில்லுங்கள்!

உங்களது திருமுழுக்கு, தண்ணீரால் நடந்திருந்தாலும், கண்ணீரால் நடந்திருந்தாலும் சரி... இப்போது எழுந்து நில்லுங்கள், எதிர்த்து நில்லுங்கள்.

உறுதியாகச் சொல்லுங்கள்:

“வாழ்வின் மிக முக்கியக் கேள்விகளின் விடைகளைத் தீர்மானிக்கும் உரிமையை குடும்பத்துடன் சிறிதும் தொடர்பற்ற நிறுவனங்களுக்கு நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம்.

சண்டைகளில் உயிர்களைக் கொன்று குவித்த கொலை நாற்றத்துடன் வீடு திரும்பும் கணவர்கள், எங்கள் அரவணைப்பையும், ஆரவார வரவேற்பையும் பெறுவதற்கு நாங்கள் இணங்கமாட்டோம்.

பிறரன்பு, கருணை, பொறுமை என்று நாங்கள் சொல்லித்தரும் பாடங்களை மாற்றி, அவற்றிற்கு எதிரான பாடங்களைச் சொல்லித்தரும் நோக்கத்துடன், எமது குழந்தைகளை எங்களிடமிருந்து பறிப்பதற்கு வரும் நிறுவனங்களை நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.

ஒரு நாட்டைச் சேர்ந்த பெண்களாகிய நாங்கள், மற்றொரு நாட்டுப் பெண்கள் மீது கனிவு கொண்டவர்கள். எனவே, எங்கள் மகன்கள் அப்பெண்களின் மகன்களைக் காயப்படுத்த விடமாட்டோம்.”

நிர்மூலமாக்கப்பட்ட இந்தப் பூமியின் அடிவயிற்றிலிருந்து எழும் ஓர் ஓலம் எங்கள் குரல்களுடன் இணைகிறது. அது சொல்வது இதுதான்: "ஆயுதங்களைக் களையுங்கள்! ஆயுதங்களைக் களையுங்கள்! உயிர் குடிக்கும் வாள், ஒருநாளும் நீதியை நிலைநாட்டும் தராசு ஆகாது!" என்பதே பூமியின் அடிவயிற்றிலிருந்து எழும் அந்த ஓலம்.

போர்க்கள அழைப்பைக் கேட்டு, தங்கள் நிலங்களையும், தொழிற்சாலைகளையும் விட்டுச்சென்றுள்ள ஆண்களைப் போல், பெண்களும் தங்கள் இல்லங்களை விட்டு வெளியேறட்டும். போரில் ஈடுபடும் ஒவ்வொரு நாட்டிலும் நல்ல முடிவுகள் உருவாக, பெண்களும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறட்டும். போரில் இறந்தோரை நினைவுகூர, அவர்களுக்காக அழுது புலம்ப, பெண்கள் ஒன்று சேரட்டும். இந்த மனிதக் குடும்பம் அமைதியில் வாழ்வதற்குரிய வழிமுறைகளைப் பெண்கள் கலந்து பேசட்டும்.

உலகின்மேல், சீசரின் உருவத்தைப் பதிக்காமல், கடவுளின் உருவத்தைப் பதிப்பது எவ்விதம் என்பதை பெண்கள் இவ்வுலகிற்குச் சொல்லித் தரட்டும்.

Julia Ward Howe அவர்கள் எழுதிய இக்கவிதை, இன்றும் நம்மைச் சூழ்ந்துள்ள அவலங்களைக் கூறுகின்றது. சண்டைகளில் உயிர்களைக் கொன்று குவித்த கொலை நாற்றத்துடன் வீடு திரும்பும் கணவர்கள் என்று இக்கவிதையில் சித்திரிக்கப்பட்டுள்ள ஆண்கள், இன்று இவ்வுலகில் பெருகி வருகின்றனர். கண்மூடித்தனமான வெறியுடன் தீவிரவாதக் குழுக்கள் பெருக்கிவரும் கொலை நாற்றத்தை, அரசுகள் மேற்கொள்ளும் இராணுவ முயற்சிகள் நீக்கமுடியுமா என்று தெரியவில்லை. பழிக்குப் பழி என்ற தீ, மன்னிப்பு என்ற மழையில் நனைந்தால் மட்டுமே, இந்தக் கொலை நாற்றம் இவ்வுலகிலிருந்து நீங்கும். மன்னிப்பு மழையைச் சுமந்துவரும் கருணை மேகங்களாக இவ்வுலகில் வலம்வருவது அன்னை என்பதை யாரும் மறுக்கமுடியாது.

பழிக்குப் பழி என்ற தீயை வளர்ப்பதற்குப் பதில், மன்னிப்பு மழையைப் பொழிந்த ஓர் அன்னையைப் பற்றி வெளியான செய்தியொன்று, இப்போது என் நினைவுக்கு வருகிறது. 2014ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் ஈரானில் இடம்பெற்ற உண்மை நிகழ்வு இது.

2014ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 15ம் தேதி, ஈரான் நாட்டில் மற்றுமோர் மரணதண்டனை மக்கள் பார்வையில் நடைபெறவிருந்தது. 27 வயதான பலால் (Balal) என்ற இளையவர் தூக்குமேடைக்கு இழுத்துச் செல்லப்பட்டார். இரு கைகளும் பின்புறமாய் கட்டப்பட்ட நிலையில், அவர், மேடை மீது வைக்கப்பட்டிருந்த ஒரு நாற்காலியின் மீது நிறுத்தப்பட்டார். அவரது கண்கள், கறுப்புத் துணியால் கட்டப்பட்டன; கழுத்தைச் சுற்றி, தூக்குக் கயிறும் மாட்டப்பட்டது.

7 ஆண்டுகளுக்கு முன் இரு இளையோரிடைய ஏற்பட்ட ஒரு சண்டையில், பலால் என்ற இளைஞர், கத்தியால் குத்தியதால், Abdollah என்ற 18 வயது இளைஞர் இறந்துபோனார். ஏழு ஆண்டுகளாக நடைபெற்ற அவ்வழக்கின் இறுதியில், பலாலுக்குத் தூக்குதண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன், தூக்குமேடையில், பலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த நாற்காலியை உதைத்துத் தள்ளி, அந்த இளைஞனைக் கொல்லும் உரிமை, Abdollahவின் பெற்றோருக்கு வழங்கப்பட்டிருந்தது. ஈரான் நாட்டின் பல பகுதிகளில் பின்பற்றப்படும் சட்ட அமைப்பின் ஒரு வெளிப்பாடு இது.

தூக்குமேடையைச் சுற்றி நின்றுகொண்டிருந்த மக்களில், பலாலின் தாயும் ஒருவர். நடக்கப்போகும் கொடுமையைத் தடுக்கமுடியாமல், கண்களில் கண்ணீர் வழிந்தோடிய வண்ணம் அவர் காத்திருந்தார். இறந்துபோன Abdollahவின் தாய் Samerah அவர்கள், அந்த நாற்காலியை நெருங்கியபோது, ஓர் அற்புதம் நிகழ்ந்தது. தாய் Samerah, இளைஞன் பலாலின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். பின்னர், அவன் கழுத்தைச் சுற்றி மாட்டப்பட்டிருந்த தூக்குக் கயிறை அவிழ்த்துவிட்டார். அருகில் நின்ற Abdollahவின் தந்தை, பலாலின் கண் கட்டுகளை அவிழ்த்து, அவனை அந்த நாற்காலியிலிருந்து இறக்கிவிட்டார்.

முற்றிலும் எதிர்பாராத வகையில் தன் மகனுக்கு வாழ்வுப் பிச்சை வழங்கப்பட்ட அற்புதத்தைக் கண்டு ஆனந்த அதிர்ச்சி அடைந்த பலாலின் தாய், தூக்குமேடையை நோக்கி ஓடினார். மேடையிலிருந்து இறங்கிவந்த தாய் Samerah அவர்களைக் கட்டியணைத்தார். இரு அன்னையரும் கண்ணீரில் கரைந்தனர்.

"தன் மகனைக் கொன்றவனை, மரணதண்டனையிலிருந்து விடுவித்தத் தாய்" என்ற தலைப்பில், அடுத்த நாள் உலக ஊடகங்களில் இந்தச் செய்தி வெளியானது. இறந்துபோன Abdollah, தன் தாயின் கனவில் தோன்றி, தான் தற்சமயம் வாழும் இடம் மிக நன்றாக இருப்பதாகவும், அதனால், அவர்கள் பலாலை மன்னித்துவிட வேண்டும் என்றும் சொன்னதாக தாய் Samerah ஊடகங்களுக்குக் கூறினார்.

'பழிக்குப் பழி' என்ற உரிமையை தன் நாட்டு அரசே வழங்கியிருந்தாலும், அந்த அரசை மீறி, கருணையை, மன்னிப்பை வழங்கமுடியும் என்பதை ஒரு தாய் நிரூபித்தது, அன்னையின் அற்புதச் சக்தியை வெளிப்படுத்துகிறது.

உலகில் பெருகிவரும் வன்முறைகளைக் களைய, அரசுகள் வகுக்கும் சட்டங்கள், இராணுவத் திட்டங்கள், குற்றத்தைக் குறைக்க வழங்கும் தீர்ப்புக்கள் அனைத்தையும்விட, மனதிலிருந்து எழும் மன்னிப்பு சக்திவாய்ந்தது என்பதை, தாய் Samerah அவர்களும், இன்னும் கோடான கோடி அன்னையரும் ஒவ்வொரு நாளும் நமக்குச் சொல்லித் தந்தவண்ணம் உள்ளனர். மன்னிப்புப் பள்ளியில் நுழையும் வயதை இவ்வுலகம் என்ற குழந்தை எப்போது அடையுமோ என்று உள்ளம் ஏங்குகிறது!

மன்னிப்பு, மரணத்தையும் வெல்லும் சக்தி கொண்டது என்பதை இவ்வுலகம் உணரவேண்டும். மன்னிப்பு என்ற மழை பொழிவதற்கு, கருணை என்ற கார்மேகங்கள் திரண்டு வரவேண்டும். கருணைக் கார்மேகமாக வலம்வருவது அன்னையர் என்பதை, தயக்கமின்றி இவ்வுலகில் பறைசாற்ற 'அன்னையர் தின'த்தைவிட சிறந்த நாள் கிடையாது. கருணையும், மன்னிப்பும் இவ்வுலகில் கரைபுரண்டு ஓடினால், வெறுப்பு, வன்முறை, போர் என்ற தீய சக்திகள் உருவாக்கும் குப்பைகளை, அவற்றால் உருவாகும் 'கொலை நாற்றத்தை' நாம் முற்றிலும் அகற்றமுடியும். இரண்டாம் உலகப் போர் முடிவுற்றதாக சொல்லப்படும் மே 8,9 ஆகிய தேதிகளைத் தொடர்ந்து, மே 10ம் தேதி அன்னைதினம் சிறப்பிக்கப்படுவது பொருத்தமாகத் தெரிகிறது.

உலகின்மேல், சீசரின் உருவத்தைப் பதிக்காமல், கடவுளின் உருவத்தைப் பதிப்பது எவ்விதம் என்பதை பெண்கள் இவ்வுலகிற்குச் சொல்லித் தரட்டும்.

Julia Ward அவர்கள் எழுதிய கவிதையின் இறுதி வரிகள், இன்று நாம் கொண்டாடி மகிழும் அன்னை தினத்தையும், விரைவில் நாம் கொண்டாடவிருக்கும் பாத்திமா அன்னை திருநாளையும் இணைக்க உதவியாக உள்ளன. அதிகாரமும், ஆணவமும் நிறைந்த சீசரின் உருவம் உலகின் மேல் பதியப் பதிய, மென்மேலும் போர்களாலும், வன்முறைகளாலும் இந்த உலகம் சிதைந்து வருகிறது என்பதை நன்கு அறிவோம். சீசரின் உருவைப் பதிப்பதற்குப் பதிலாக, அன்பான, ஆறுதலான கடவுளின் உருவைப் பதிப்பது எப்படி என்பதை அன்னை மரியா தான் வாழ்ந்த காலத்தில் மட்டும் சொல்லித் தரவில்லை. அவர் விண்ணகம் சென்றபின்பும் பல இடங்களில் தோன்றி இந்தச் செய்தியைப் பகிர்ந்தார். சிறப்பாக பாத்திமா நகரில் அவர் தோன்றியபோது, உலகைச் சூழ்ந்திருந்த போரைக் குறித்தும், உலக அமைதிக்காக மக்கள் செபங்களை எழுப்ப வேண்டும் என்பது குறித்தும் சிறப்பான செய்திகளைக் கூறினார்.

பல்வேறு போர்களால், போராட்டங்களால் தொடர்ந்து காயப்பட்டு வரும் நமது உலகிற்குத் தாய்மை, பெண்மை ஆகிய குணமளிக்கும் குணங்கள் அதிகம் தேவைப்படுகின்றன. எனவே, அன்னை தினம், வாழ்த்து அட்டைகள், மலர் கொத்துக்கள் என்று வியாபார நாற்றம் வீசும் திருநாளாக மாறிவிடாமல், நம் ஒவ்வொருவரிலும் உள்ள தாய்மைப் பண்பை வெளிப்படுத்தும் ஒரு நாளாக, அதன் வழியாக உலகின் அமைதிக்கு உறுதியான அடித்தளமிடும் ஒரு நாளாக இருக்க வேண்டுமென்று சிறப்பாக வேண்டிக்கொள்வோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.