2015-05-13 15:54:00

அமைதி ஆர்வலர்கள் – 1982ல் நொபெல் அமைதி விருது - பாகம்1


மே,13,2014. ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் UNHCR புலம்பெயர்ந்தோர் அமைப்பு 1981ம்  ஆண்டின் நொபெல் அமைதி விருதைப் பெற்றது. இந்நிறுவனம் 1954ம் ஆண்டிலும்  நொபெல் அமைதி விருதைப் பெற்றது. போர்களினாலும், இயற்கைப் பேரிடர்களினாலும் புலம் பெயர்ந்த மக்களின் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களின் துன்பங்கள் தீர்க்கப்படுவதற்கு உழைத்து வருகிறது இந்நிறுவனம். அதோடு புலம் பெயர்ந்த மக்கள் மீண்டும் தங்களின் சொந்த நாடுகளில் குடியேறவும் உழைத்து வருகிறது UNHCR. 1950ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனத்தின் தலைமையகம் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் அமைந்துள்ளது. இந்நிறுவனத்தில் உலகெங்கும் ஏறக்குறைய ஒன்பதாயிரம் பேர், குறிப்பாக, உதவிகள் அதிகம் தேவைப்படும் புலம்பெயர்ந்தோர் மற்றும் நாட்டுக்குள்ளே இடம்பெயர்ந்தோர் மக்கள் மத்தியில் மனிதாபிமானப் பணியாற்றி வருகின்றனர். 1954ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது பற்றிப் பார்த்தபோதே இந்த UNHCR நிறுவனம் பற்றி நாம் அறிந்தோம் என்பதால் இன்றைய நிகழ்ச்சியில் 1982ம் ஆண்டில் நொபெல் அமைதி விருது பற்றிப் பார்ப்போம்.

1982ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதை Alva Myrdal, Alfonso Garcia Robles ஆகிய இருவரும் பகிர்ந்து கொண்டனர். சுவீடன் நாட்டவரான Alva Myrdal, மெக்சிகோ நாட்டவரான Alfonso Garcia Robles ஆகிய இருவரும் உலகில் ஆயுதக் கட்டுப்பாடு மற்றும் ஆயுதக் களைவுக்கு எடுத்துக் கொண்ட முயற்சிகளுக்காக இவ்விருதைப் பெற்றனர். “அணு ஆயுதங்கள், அழிவுக்கேயன்றி நன்மை எதுவும் செய்வதில்லை என்பதை மனித குல மக்கள் அனைவரும் தற்போது கற்று வருகின்றனர்” என்று கூறியுள்ள Alva Myrdal அவர்கள்,  சுவீடன் நாட்டின் உப்சாலாவில் 1902ம் ஆண்டு சனவரி 31ம் நாளன்று பிறந்தார். 1924ல், பல்கலைக்கழகப் படிப்பை முடித்த Alva Myrdal அவர்கள், அதே ஆண்டில் Gunnar Myrdal என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். 1930களில் தனது கணவருடன் சேர்ந்து சமூகநலத்தை ஊக்குவிப்பதில் பெரும் பங்காற்றினார்.  "நெருக்கடியில் மக்கள் பிரச்சனை" என்ற தலைப்பில் Myrdal தம்பதியர் இணைந்து ஒரு நூல் வெளியிட்டனர். அதே நேரம், மக்களின் குடியிருப்புப் பிரச்சனை, பள்ளிப் பிரச்சனை ஆகியவற்றைத் தீர்ப்பதிலும் முழுமூச்சுடன் ஈடுப்ட்டார் Alva Myrdal.

Alva Myrdal அவர்கள், சுவீடனில் சமூக சனநாயகக் கட்சியில் புகழ்பெற்ற உறுப்பினராகத் திகழ்ந்தார். அந்நாட்டில், 2ம் உலகப் போருக்குப் பின் திட்டங்கள் வகுப்பதற்கு 1943ல் அக்கட்சி அவரை நியமித்தது. அதே ஆண்டில், 2ம் போருக்குப் பின் உதவிகள் மற்றும் மீள்கட்டமைப்பு குறித்த அனைத்துலக முயற்சிக்கான அரசு குழுவுக்கும் இவர் நியமிக்கப்பட்டார். Alva Myrdal அவர்கள், 2ம் உலகப் போருக்குப் பின், தனது நேரம், சக்தி அனைத்தையும் அனைத்துலக விவகாரங்களுக்கென செலவழித்தார். 1949ம் ஆண்டு முதல் 1950ம் ஆண்டு வரை ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் சமூக நல்வாழ்வுக் கொள்கைப் பிரிவுக்குத் தலைவராக இருந்தார். 1950ம் ஆண்டு முதல் 1955ம் ஆண்டு வரை ஐ.நா.வின் UNESCO கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார நிறுவனத்துக்குத் தலைவராக இருந்தார். ஐ.நா.வில் இத்தகைய உயர் பதவியை வகித்த முதல் பெண் என்ற பெருமை இவருக்கு உண்டு. 1955ம் ஆண்டு முதல் 1956ம் ஆண்டு வரை, இந்தியா, மியான்மார், இலங்கை ஆகிய நாடுகளுக்கான சுவீடன் தூதராகப் பணியாற்றினார். 1962ல், ஜெனீவா ஆயுதக் களைவு கருத்தரங்குக்கு சுவீடன் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். இப்பணியில் 1973ம் ஆண்டு வரை இருந்தார். 1962ம் ஆண்டில் பாராளுமன்ற உறுப்பினரானார். 1967ல் அமைச்சர் குழுவிலும் உறுப்பினரானார். ஆயுதக் களைவை ஊக்குவிக்கும் சிறப்புப் பொறுப்பும் இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. பல ஆண்டுகள் ஐ.நா.வில் சுவீடன் நாட்டுப் பிரதிநிதியாகப் பணியாற்றி ஆயுதக் களைவுக்காகக் குரல் கொடுத்தார் Alva Myrdal.

ஜெனீவாவில் இடம்பெற்ற ஆயுதக் களைவுப் பேச்சுவார்த்தைகளில் மிக முக்கிய அங்கம் வகித்தவர் Alva Myrdal. இப்பேச்சுவார்த்தையில் அணி சேரா நாடுகளின் தலைவராக உருவெடுத்து, அமெரிக்க ஐக்கிய நாடு, முன்னாள் சோவியத் யூனியன் ஆகிய இரு வல்லரசுகளின் ஆயுதக் களைவு நடவடிக்கைக்கு மிகுந்த அழுத்தம் கொடுத்தார். ஜெனீவாவில் தனக்குக் கிடைத்த அனுபவங்களை வைத்து, "ஆயுதக்களைவின் விளையாட்டு" என்ற நூலை எழுதி வெளியிட்டார் Alva Myrdal. இவர் தனது பணியில் மிகுந்த அர்ப்பணத்தோடு செயல்பட்டார். தான் செய்யும் பணிக்குரிய உள்தூண்டுதல் இவரிடம் அதிகமாகத் தெரிந்ததாகச் சொல்லப்படுகின்றது. வல்லுனர்களின் ஆதரவுடன் ஆயுதக் களைவு குறித்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கூறுகளை நன்கு கற்றார். இந்த அறிவைக் கொண்டு, Stockholm அனைத்துலக SIPRI அமைதி ஆய்வு நிறுவனத்தை உருவாக்கவும் உதவினார் Alva Myrdal. அணு ஆயுதங்கள் இல்லாத ஐரோப்பாவை உருவாக்க இவர் கடுமையாகப் போராடினார்.

Alva Myrdal அவர்களுக்கு Jan Myrdal, Sissela Bok, Kaj Fölster என மூன்று பிள்ளைகள். இவர் 1986ம் ஆண்டு பிப்ரவரி முதல் நாள் இறந்தார். “அமைதிக்கான ஏக்கம் அனைத்து மனிதர்களின் இதயங்களில் வேரூன்றப்பட்டுள்ளது. ஆயினும் இக்காலத்தில் அதிகம் தேவைப்படும் இந்த அமைதியை ஊக்குவிப்பதற்கோ, நாடுகளுக்கு இடையே இடம்பெறும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கோ மக்கள் மத்தியில் ஆர்வம் குறைவு”. “இன்று அல்லது விரைவில் அரசியல் தலைவர்கள் பொது நலனில் அக்கறை செலுத்துவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது” என்று கூறியவர் Alva Myrdal.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.