2015-05-21 16:12:00

கிறிஸ்தவர்களுக்கு எதிராக வன்முறைகள் அதிகரிப்பு-திருப்பீடம்


மே,21,2015 பகைவரை அன்பு செய்யுங்கள் என்ற கட்டளையைக் கடைப்பிடித்து வாழும் கிறிஸ்தவர்களே, உலகின் பல நாடுகளில் அதிகமாக வன்முறைகளுக்கு உள்ளாகி வருகின்றனர் என்று திருப்பீட அதிகாரி ஒருவர் கூறினார்.

கிறிஸ்தவர்களுக்கு எதிராகக் காட்டப்படும் சகிப்பற்றதன்மை மற்றும் வன்முறை ஆகியவற்றைத் தடுக்க, வியென்னா நகரில் அண்மையில் கூடிய ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கில் திருப்பீடத்தின் சார்பில் பங்கேற்ற அருள்பணி Janusz Urbanczyk அவர்கள் இவ்வாறு கூறினார்.

சிறுபான்மையினராய் பல நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்கள், அமைதியை விரும்புகிறவர்களாக இருந்தாலும், அவர்கள் வன்முறைக்கு உள்ளாகும் போக்கு அண்மைக் காலங்களில் வளர்ந்து வருகிறது என்பதை அருள்பணி Urbanczyk அவர்கள் சுட்டிக்காட்டினார்.

நேரடி வன்முறைகள் இடம்பெறாத பல ஐரோப்பிய நாடுகளிலும், கிறிஸ்தவ நம்பிக்கை கொண்டோர் அதை, தனிப்பட்ட முறையில் கடைப்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டாலும், பொது இடங்களில் தங்கள் வழிபாடுகளை நடத்தவும், மத நம்பிக்கையை வெளிப்படுத்தவும் விதிக்கப்பட்டுள்ள தடைகள் ஒருவகை வன்முறையே என்று அருள்பணி Urbanczyk அவர்கள் தன் உரையில் வலியுறுத்தினார்.

கிறிஸ்தவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகளை மையப்படுத்தி, நான்கு ஆண்டுகளுக்கு முன் உரோம் நகரில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கிற்குப் பின், கிறிஸ்தவர்களுக்கு எதிராக வன்முறைகள் பெருமளவு கூடியுள்ளது என்று அருள்பணி Urbanczyk அவர்கள் தன் உரையில் வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.