2015-05-21 16:23:00

கொள்ளை நோய்களைக் கட்டுப்படுத்த தீவிர ஆய்வு தேவை


மே,21,2015 அண்மையில் மனித சமுதாயத்தை உலுக்கிய எபோலா நோய் பல பாடங்களை நமக்குச் சொல்லித் தந்துள்ளது; குறிப்பாக, கொள்ளை நோய்கள் பரவும்போது, அவற்றை உடனடியாகக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை உலகம் இன்னும் தீவிரமாக ஆய்வு செய்யவேண்டும் என்ற பாடத்தை எபோலா நோய் சொல்லித் தந்தது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

உலக நலவாழ்வு நிறுவனமான WHO, மே 18 இத்திங்கள் முதல், 26 வருகிற செவ்வாய் முடிய ஜெனீவாவில் நடத்தும் 68வது ஆண்டு கூட்டத்தில் உரையாற்றிய நலவாழ்வுப் பணியாளர்கள் திருப்பீட அவையின் தலைவர், பேராயர் Zygmunt Zimowski அவர்கள் இவ்வாறு கூறினார்.

மேற்கு ஆப்ரிக்க நாடுகளை பெருமளவில் பாதித்த எபோலா நோய்க்கு 9,380 பேர் பலியாயினர் என்றும், 23,000த்திற்கும் அதிகமானோர் பாதிக்கபட்டனர் என்றும் கூறிய பேராயர் Zimowski அவர்கள், குறைந்த வருமானம் கொண்டிருக்கும் நாடுகளில் வாழ்வோர் பெரும்பாலான கொள்ளை நோய்களைச் சமாளிக்கும் ஆற்றல் இன்றி வாழ்கின்றனர் என்று சுட்டிக்காட்டினார்.

நோய்களின் தாக்கம் உலகை அதிர்ச்சியடைய செய்யும் வேளையில் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபடும் நாம், நீடித்த நலனை விளைவிக்கும் திட்டங்களிலும் தீவிரம் காட்டவேண்டும் என்று பேராயர் Zimowski அவர்கள், தன் உரையில் வலியுறுத்தினார்.

உலகின் பல நாடுகளிலிருந்தும் ஜெனீவா சென்றிருக்கும் 3300க்கும் அதிகமான உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் இக்கூட்டத்தில், எபோலா நோயின் தாக்குதல் குறித்து விவாதங்கள் நடைபெறுகின்றன என்று WHO வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.