2015-05-22 15:19:00

இயேசுவின் கூரிய பார்வை நம் இதயங்களை மாற்றுவதாக


மே,22,2015. இயேசு நம்மை உற்று நோக்குமாறும், நம் பாவங்களுக்காக நாம் மனம் வருந்தவும், நம் இதயங்கள் மாற்றம் அடையவும் நாம் என்ன செய்ய வேண்டும் என்று இயேசு கூறுமாறு அவரிடம் கேட்கவும் வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

ஓர் அழைப்பால், மன்னிப்பால் அல்லது ஒரு பணியால் இயேசு நம்மை கூர்ந்து  பார்க்கிறாரா? என்று நாம் கவனிக்க வேண்டுமென்று, இவ்வெள்ளி காலை சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலி மறையுரையில் கூறினார் திருத்தந்தை.

இந்நாளைய திருப்பலி வாசகங்களை மையப்படுத்தி மறையுரை வழங்கிய திருத்தந்தை, இயேசு, திருத்தூதர் பேதுருவை, தேர்வு, மன்னிப்பு, பணி ஆகிய மூன்று விதங்களில் உற்றுப் பார்த்தார் என்று சொல்லி, அவை பற்றி விளக்கினார்.

மெசியாவைக் கண்டோம் என திருத்தூதர் ஆண்ட்ரூ தனது சகோதரர் பேதுருவிடம் சொல்லி அவரை இயேசுவைப் பார்ப்பதற்கு அழைத்துச் சென்றார், அப்போது இயேசு பேதுருவை அழைத்தார், இது முதல் பார்வை என்றார் திருத்தந்தை.

இயேசு சிலுவைப்பாடுகள் அனுபவிப்பதற்கு முன்னர் பேதுரு, இயேசுவைத் தெரியாது என மூன்று முறை மறுதலித்தார், அப்போதைய இயேசுவின் பார்வை மன்னிப்பு என்ற திருத்தந்தை, இயேசு உயிர்த்த பின்னர், நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா என மூன்று முறை பேதுருவிடம் கேட்டு அவரிடம் பணியை ஒப்படைத்தார் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

எத்தகைய பார்வையை இயேசு இன்று என்மீது செலுத்துகிறார், இயேசு என்னை எப்படி உற்று நோக்குகிறார், அழைப்போடா, மன்னிப்போடா அல்லது பணியோடா என்று நாமும் சிந்திப்போம் எனக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, இயேசு உருவாக்கிய பாதையில் நாம் அனைவரும் இயேசுவால் கூர்ந்து பார்க்கப்படுகிறோம் என்றும் கூறினார்.

இயேசு நம்மிடம் எதையோ கேட்கிறார், ஏதோ ஒன்றிக்காக நம்மை மன்னிக்கிறார் மற்றும் நமக்குப் பணியையும் கொடுக்கிறார், இயேசு இத்திருப்பலிப் பீடத்தில் வருகிறார், ஆண்டவரே, நீர் இங்கே எம் மத்தியில் இருக்கிறீர், உமது பார்வையை என்மீது வையும், நான் என்ன செய்ய வேண்டுமென்று சொல்லும், நான் என் தவறுகளுக்காக எப்படி பிராயச்சித்தம் செய்ய வேண்டுமென்று கூறும் எனக் கேட்போம் என்று தனது மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், "ஆண்டவரே, துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்களுக்கு உமது தூய ஆவியாரை அனுப்பி அவர்களுக்கு ஆறுதலையும் சக்தியையும் அளித்தருளும் எனச் செபிப்போம்" என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் Twitter செய்தியாக, ஒன்பது மொழிகளில் இவ்வெள்ளியன்று வெளியானது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.