2015-05-23 16:08:00

சிரியாவில் கடத்தப்பட்டுள்ள அ.பணியாளரின் விடுதலைக்காகச் செபம்


மே,23,2015. சிரியாவின் ஹோம்ஸ் உயர்மறைமாவட்டத்தில் இரு தினங்களுக்கு முன்னர் துப்பாக்கிமுனையில் கடத்தப்பட்ட அருள்பணியாளர் Jacques Mourad அவர்கள் பற்றிய விபரங்கள் எதுவும் இதுவரை தெரியவில்லை என்று இச்சனிக்கிழமையன்று கூறினார் சிரியா திருப்பீடத் தூதர் பேராயர் Mario Zenari.

சிரியாவின் ஹோம்ஸ் நகருக்கு ஏறக்குறைய 60 மைல் தூரத்திலுள்ள Al Quaryatayn புறநகர்ப் பகுதியிலுள்ள Mar Elian துறவு மடத்திலிருந்து இவ்வியாழனன்று கடத்தப்பட்டார் அருள்பணியாளர் Jacques Mourad. அச்சமயத்தில் சப்தம் கேட்டு வெளியே வந்த இளைஞர் ஒருவரும் கடத்தப்பட்டுள்ளார்.

இவர்கள் குறித்த விபரங்களை அறிவதற்கு, கடத்தியவர்களோடு தொடர்பு கொள்வதற்கு எடுத்த எல்லாவித முயற்சிகளும் பலன்தரவில்லை என்று கூறினார் பேராயர் Zenari.

மேலும், அருள்பணியாளர் Jacques Mourad அவர்கள் பாதுகாப்பாக விடுதலை செய்யப்படுவதற்குச் செபிக்குமாறு ஹோம்ஸ் உயர்மறைமாவட்டம் அனைவரையும் கேட்டுள்ளது.

இதற்கிடையே, இவ்வெள்ளியன்று al Qadeehவின் ஷியா முஸ்லிம் பிரிவினர் மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ். இஸ்லாமிய அரசு பொறுப்பேற்றுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இதில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.