2015-05-28 16:23:00

உலகளவில் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது


மே,28,2015. உலகளவில் கடும் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை எண்பது  கோடிக்கும் குறைவாக உள்ளது என்று ஐ. நா.வின் மூன்று உணவு நிறுவனங்கள் வெளியிட்ட புதிய அறிக்கை ஒன்று கூறுகின்றது.

உலகில் 2015ல் உணவுப் பாதுகாப்பின் நிலைமை (SOFI) என்ற தலைப்பில் ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம்(FAO), வேளாண்மை வளர்ச்சிக்கான அனைத்துலக நிதி நிறுவனம்(IFAD), உலக உணவுத் திட்ட நிறுவனம்(WFP) ஆகிய மூன்றும் இணைந்து இப்புதனன்று வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மில்லேன்ய இலக்குகளில் ஒன்றான உலகில் கடும் பசியை ஒழிப்பது குறித்த இலக்கில் காணப்படும் முன்னேற்றம், நம் காலத்தில் உலகில் பசி பட்டினியை முற்றிலும் அகற்றவிட முடியும் என்பதைக் காட்டுகின்றது என்று FAO நிறுவன இயக்குனர் ஹோசே கிரஸ்ஸியானோ த சில்வா தெரிவித்தார்.

உலகின் மக்கள்தொகை பெருகி, மோதல்கள் மற்றும் இயற்கைப் பேரழிவுகள் ஏற்பட்டாலும், பட்டினியால் வாடும் மக்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது என்றும் அவ்வறிக்கை தெரிவித்துள்ளது.

ஊட்டச்சத்துப் பற்றாக்குறை உள்ளவர்களின் எண்ணிக்கையை, இந்த ஆண்டின் இறுதிக்குள் பாதியாகக் குறைக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கை அடைவதில் பெரும்பாலான நாடுகள் வெற்றி கண்டுள்ளன என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.

பசியிலிருந்து மக்களை விடுவிப்பது தொடர்பில் கிழக்கு ஆசியா, இலத்தீன் அமெரிக்கா, கரீபியன் தீவு நாடுகள் ஆகியவை வெகுவாக முன்னேற்றம் அடைந்துள்ளன.

எனினும், சஹாரா பாலைவனத்துக்கு தெற்கே உள்ள பகுதியிலேயே இன்னும் உலகளவில் பசி பட்டினியின் தாக்கம் அதிகமாக உள்ளது என FAO நிறுவனம் கூறுகிறது

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.