2015-06-04 15:40:00

பட்டினியை ஒழிக்க, உலகினர் இணையவேண்டும் - FAO இயக்குனர்


ஜூன்,04,2015 பட்டினியையும், உணவுப் பற்றாக்குறையையும் இவ்வுலகிலிருந்து ஒட்டுமொத்தமாக நீக்கும் உலகளாவிய இயக்கத்தில், உலகினர் அனைவரும் இணையவேண்டும் என்று ஐ.நா.வின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஐ.நா.வின் உணவு, வேளாண்மை நிறுவனமான FAOவின் தலைமை இயக்குனர், Jose Graziano da Silva அவர்கள், உலகின் 50க்கும் மேற்பட்ட நாடுகளின் வேளாண்துறை அமைச்சர்களுக்கும் இன்னும் உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிகளுக்கும், இவ்வியாழனன்று, மிலான் நகரில் வழங்கிய உரையில் இவ்வாறு கூறினார்.

உலகின் பட்டினியைப் போக்குதல், உணவு பாதுகாப்பை உறுதி செய்தல், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு அளவைச் சீரமைத்தல் ஆகிய இலக்குகளை இவ்வுலகம் குறிப்பிட்ட காலத்திற்குள் அடைவதற்கு அனைவருமே இணைந்து உழைக்கவேண்டும் என்று FAO இயக்குனர் da Silva எடுத்துரைத்தார்.

உலகின் பட்டினிக்கு ஆணிவேராக இருப்பது, உணவு இல்லா நிலையல்ல, மாறாக, மனித சமுதாயத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளும், பகிர்ந்துகொள்ள முடியாத மனநிலையுமே என்று da Silva அவர்கள் தன் உரையில் வலியுறுத்தினார்.

மிலான் நகரில் கூடியிருக்கும் பன்னாட்டு அமைச்சர்களும், ஏனைய அரசு அதிகாரிகளும் இணைந்து, உலகின் பட்டினியை நீக்கும் வழிகளை தெளிவாக்கும் 'மிலான் அறிக்கை'யொன்றை இவ்வெள்ளியன்று வெளியிடுவர் என்று மிலான் உலகக் கண்காட்சி அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.