2015-06-06 16:26:00

கடுகு சிறுத்தாலும் – ஆண்டவன் சலிப்படைவதே இல்லை!


ஆல்பேனியா நாட்டில், கம்யூனிசக் கொள்கைகளையும், கடவுள் மறுப்புக் கொள்கைகளையும் திணித்து, 40 ஆண்டுகளுக்கும் மேல் (1944-1985) ஆட்சி செய்தவர், Enver Halil Hoxha. அதே ஆல்பேனியாவில் பிறந்து, இந்தியாவில் பணியாற்றி, உலகப் புகழ்பெற்ற அன்னை தெரேசா அவர்களை, தலைவர் Hoxha அவர்கள், 1985ம் ஆண்டு, ஆல்பேனியாவிற்கு வரும்படி அழைத்தார். அன்னையும் அவ்வழைப்பை ஏற்று அங்கு சென்றார்.

அன்னைக்கு வழங்கப்பட்ட வரவேற்பு நிகழ்வில், தலைவர் Hoxha அவர்கள், அன்னையின் அற்புதப் பணிகளைப் பாராட்டிப் பேசினார். தன் உரையின் இறுதியில் அவர் அன்னையைப் பார்த்து, "நான் இந்த நாட்டிற்குப் பொறுப்பாக இருக்கும்வரை, கிறிஸ்துவை மீண்டும் இந்த நாட்டிற்குள் அனுமதிக்க மாட்டேன்" என்று ஆணித்தரமாகக் கூறிவிட்டு அமர்ந்தார்.

அவரைத் தொடர்ந்து, அக்கூட்டத்தில் உரையாற்றிய அன்னைத் தெரேசா அவர்கள், "அரசுத் தலைவரே, கிறிஸ்துவைப் பற்றி நீங்கள் தற்போது சொன்ன சூளரை தவறானது. கிறிஸ்துவின் உண்மைப் பிரசன்னத்தை நான் உங்கள் அரசு மாளிகைக்குள் இப்போது கொணர்ந்துள்ளேன். இறக்கும் நிலையில் இருப்போர் நடுவில் நான் பணிசெய்ய வேண்டியிருப்பதால், கிறிஸ்துவின் உடலாக மாறியுள்ள திருநற்கருணையை நான் எப்போதும் ஒரு சிறு குப்பியில் வைத்து என்னுடன் சுமந்து செல்கிறேன். இன்று, இங்கே, இதோ என் இதயத்தருகே உள்ள ஒரு சிறு பையில் நான் கொணர்ந்துள்ள திருநற்கருணை வழியாக, கிறிஸ்துவின் உண்மைப் பிரசன்னம் இந்த மாளிகைக்குள், உங்கள் அனுமதியின்றி நுழைந்துவிட்டது" என்று அன்னை தெரேசா அவர்கள் தெளிவாகக் கூறினார்.

ஆண்டவனுக்கு இவ்வுலகில் இடமில்லை என்று அரசுத் தலைவர்கள் அகந்தையோடு பறைசாற்றினாலும், தன் அன்புப் பிரசன்னத்தை அகிலமெங்கும் நிலைநாட்டும் முயற்சியில், ஆண்டவன் சலிப்படைவதே இல்லை!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.