சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ நிகழ்வுகள்

திருத்தந்தை : பிரச்சனைகளைக் கண்டு விலகுவது, மனித இயல்பு

ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் நடத்திய கூட்டதினர் சந்திப்பு - OSS_ROM

11/06/2015 16:05

ஜூன்,11,2015. சமுதாயத்தின் பிரச்சனைகளைக் காணும்போது, அவற்றை வேறு யாராவது ஒருவர் செய்வார் என்று நமக்குள் சொல்லிக்கொண்டு விலகிச் செல்வது, மனிதராகிய நம் ஆழ்மனதில் ஓடும் எண்ணங்களில் ஒன்று என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

ஜூன் 6, கடந்த சனிக்கிழமை முதல், ஜூன் 15, வருகிற திங்கள் முடிய உரோம் நகரில், ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனமான FAO நடத்திவரும் ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கில் பங்கேற்றுவரும் 450க்கும் அதிகமான உறுப்பினர்களை, இவ்வியாழன் மதியம் திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிரச்சனைகளைக் கண்டு விலகும் மனித இயல்பு குறித்து தன் உரையின் துவக்கத்தில் குறிப்பிட்டார்.

2014ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற FAO கருத்தரங்கில் தான் கலந்துகொண்டதன் நினைவுகளை பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, அக்கருத்தரங்கில் எடுக்கப்பட்ட முடிவுகள், வெறும் ஏட்டளவு முடிவுகளாக இல்லாமல், செயல்வடிவம் பெற்றிருக்கும் என்று தான் நம்புவதாகக் குறிப்பிட்டார்.

பட்டினியால் தவிக்கும் மக்களின் எண்ணிக்கை குறைந்துவருவதாக புள்ளிவிவரங்கள் கூறினாலும், உணவு ஒவ்வொரு மனிதரின் அடிப்படை உரிமை என்ற நிலையை அடைய இன்னும் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையில் வலியுறுத்தினார்.

உலகினர் பசியைப் போக்குவதுபற்றி சிந்திக்கும் வேளையில், உலகில் வீணாக்கப்படும் உணவைக் குறித்தும், உணவுப் பயிர்களுக்குப் பதிலாக, இலாபம் கொணரும் வர்த்தகப் பயிர்கள் நம் நிலங்களை ஆக்ரமித்துவருவது குறித்தும் நாம் சிந்திக்கவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எடுத்துரைத்தார்.

உலகில் உணவுப் பொருள்களின் விலை, 2008ம் ஆண்டு இரட்டிப்பானது என்றும், அதன்பின்னர் விலை உயர்வு ஒரு சமநிலையை அடைந்தாலும், பொதுவாக, உணவுப் பொருள்களின் விலை, வறியோருக்கு எட்டாத உயரத்தில் உள்ளது என்பதும் வேதனையான ஒரு உண்மை என்று திருத்தந்தை தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

தண்ணீரின் பகிர்வும், தகுந்த வகையில் விளைநிலங்களைப் பயன்படுத்துவதும் நாம் சந்தித்துவரும் உச்சநிலை பிரச்சனைகள் என்பதை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் FAO பன்னாட்டு உறுப்பினர்களுக்கு வழங்கிய உரையின் இறுதியில் சிறப்பாகக் குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

11/06/2015 16:05