2015-06-11 16:30:00

மிலான் கண்காட்சியில், திருப்பீடத்தின் தேசிய நாள்


ஜூன்,11,2015. தொழில்துறை, பொருளாதாரம், அறிவியல், கலாச்சாரம் ஆகிய அனைத்துத் துறைகளிலும், தனிப்பட்டவர்களும், நிறுவனங்களும் மேற்கொள்ளும் முயற்சிகளை, கத்தோலிக்கத் திருஅவை கூர்ந்து கவனித்து வருகிறது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

மிலான் நகரில் நடைபெற்றுவரும் உலகக் கண்காட்சியின் ஒரு நிகழ்வாக, ஜூன் 11, இவ்வியாழனன்று, திருப்பீடத்தின் தேசிய நாள் கடைபிடிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் துவக்க விழாவில் உரையாற்றிய திருப்பீடச் செயலர் அலுவலகத்தின் உயர் அதிகாரி, அருள்பணி Angelo Becciu அவர்கள், பல்வேறு துறைகளில் திருஅவையும், திருப்பீடமும் காட்டிவரும் ஆர்வத்தைச் சுட்டிக்காட்டினார்.

அனைத்துத் துறைகளும் இணைந்து, முழு மனித வளர்ச்சிக்குப் பயன்படவேண்டும் என்பதே, திருஅவையின் முக்கியக் குறிக்கோள் என்று அருள்பணி Becciu அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டார்.

"பூமிக் கோளத்திற்கு உணவூட்டுதல். வாழ்வுக்குரிய சக்தி" என்ற தலைப்பில் கொண்டாடப்படும் திருப்பீடத்தின் தேசிய நாள் நிகழ்வுகளில், திருப்பீட கலாச்சார அவைத் தலைவர், கர்தினால் Gianfranco Ravasi, இத்தாலிய ஆயர் பேரவையின் தலைவர், கர்தினால் Angelo Bagnasco, மிலான் பேராயர், கர்தினால் Angelo Scola ஆகியோரும் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.