2015-06-17 16:21:00

பெண்களின் முன்னேற்றமும், நிலையான சமுதாயமும் - ஐ.நா. அதிகாரி


ஜூன்,17,2015. பெண்களுக்கு வழங்கப்படும் கல்வியும், வேலைவாய்ப்பும் சமுதாயத்தின் தேவை மட்டுமல்ல; அதுமட்டுமே சமுதாயத்தை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும் என்று ஐ.நா. உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

பெண்கள் முன்னேற்றம் என்ற கருத்தில், ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. கருத்தரங்கில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் Zeid Ra’ad Al Hussein அவர்கள் பேசுகையில், பெண்களின் முன்னேற்றமும், நிலையான சமுதாயமும் ஒன்றோடொன்று பிணைந்தது என்று குறிப்பிட்டார்.

174 நாடுகளில், ஐ.நா. குழுவொன்று மேற்கொண்ட ஓர் ஆய்வில், கல்வியிலும், வேலை வாய்ப்புக்களிலும் பெண்கள் உயர்ந்துள்ள நாடுகளில் அமைதியும், முன்னேற்றமும் வளர்ந்துள்ளதெனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பெண்கல்விக்கு எதிராகப் போராடும் குழுக்கள், பெண்களின் வளர்ச்சி கண்டு ஏற்படும் அச்சத்தினால், வன்முறைகளைக் கையாளுகின்றன என்று ஐ.நா. அதிகாரி Al Hussein அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

வளர்ந்துவரும் நாடுகளில், 18 வயதுக்கு முன்னதாகவே, சிறுமிகள் திருமணத்திற்குக் கட்டாயப்படுத்தப்படுவதால், அவர்கள் கல்வியும், வேலைவாய்ப்புக்களும் அநீதமான வழிகளில் பறிக்கப்படுகின்றன என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர், Al Hussein அவர்கள் கவலை வெளியிட்டார்.

ஆதாரம் : UN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.