2015-06-23 16:09:00

மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக உழைக்கிறது திருப்பீடம்


ஜூன்,23,2015. அரசியலின் அதிகாரப் போட்டிகளில் எவ்விதத்திலும் தலையிடாத திருப்பீடம், மக்களின் உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரத்தை மனதில்கொண்டு ஹெல்சின்கி ஒப்பந்தத்தில் தலையிட்டது எனக் கூறினார் திருப்பீடச்செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின்.

ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு குறித்த ஒப்பந்தம் 1975ம் ஆண்டு பின்லாந்தின் ஹெல்சின்கியில் 35 நாடுகளால் கையெழுத்திடப்பட்டதன் 40ம் ஆண்டைக் கொண்டாடும் விதமாக, இத்தாலிய செனட் அவை ஏற்பாடு செய்த கூட்டத்தில் உரையாற்றிய கர்தினால் பரோலின் அவர்கள், உலக அமைதியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்த திருப்பீடம், இவ்வொப்பந்தத்திற்கு தன் முழு ஆதரவையும் வழங்கியது என்றார்.

தனியார்களின், குழுக்களின் மத விடுதலையை ஹெல்சின்கி ஒப்பந்தம் வலியுறுத்தியதையும் சுட்டிக்காட்டியக் கர்தினால் பரோலின் அவர்கள், சமூக அமைதிக்கு இவைகளும் இன்றியமையாத தேவை என்றார்.

ஐரோப்பியர்களின் உரிமைகளைக் காப்பதிலும், அவர்களின் சுதந்திரத்தை உறுதி செய்வதிலும், கடந்த காலங்களில், கிறிஸ்தவம் ஆற்றிவந்துள்ள பணிகளையும் தன் உரையில் குறிப்பிட்டார், திருப்பீடச் செயலர் கர்தினால் பரோலின். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.