2015-06-29 15:56:00

இதய மாற்றமே மனித சமுதாயம் எதிர்கொள்ளும் ஒரே சவால்


ஜூன்,29,2015. இன்றைய மனித சமுதாயம் எதிர்நோக்கும் மிகப்பெரிய ஒரே சவால், அறிவியலோ அல்லது தொழில்நுட்பமோ அல்ல, மாறாக நம் இதயங்களுக்குள்ளும், மனங்களுக்குள்ளும் ஏற்பட வேண்டிய மாற்றமே என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் ஐ.நா.வில் கூறினார்.

காலநிலை மாற்றம் குறித்த ஐ.நா. உயர்மட்ட கூட்டத்தில் இத்திங்களன்று உரையாற்றிய, திருப்பீட நீதி மற்றும் அமைதி அவைத் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், இறைவா உமக்கே புகழ்(Laudato si') என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புதிய திருமடலின் சில பகுதிகளைக் குறிப்பிட்டுப் பேசினார்.

உலகில் ஏழ்மையை அகற்றுவதற்கும், சுற்றுச்சூழல் அழிவைக் குறைப்பதற்கும், மனித சமுதாயம், வளர்ச்சி, உற்பத்தி, வர்த்தகம் மற்றும் நுகர்வு ஆகியவற்றில் செலுத்தும் ஆக்ரமிப்புகளை ஆழமாகச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டியது இன்றியமையாதது என்றும் கூறினார் கர்தினால் டர்க்சன்.

கார்பன்டை ஆக்ஸைடையும், மாசுபடுத்தும் பிற வாயுக்களையும் அடுத்த சில ஆண்டுகளில் வெகுவாய்க் குறைப்பதற்கு உதவும் கொள்கைகளை உலக நாடுகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும், இன்றைய வயது வந்தோரும் உடனடியாக உருவாக்க வேண்டும் என்ற நியதியை எதிர்கொள்கின்றனர் என்றும் ஐ.நா. உயர்மட்ட கூட்டத்தில் கூறினார் கர்தினால் டர்க்சன்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.