2015-06-30 17:03:00

கருணையின் மறைப்பணியாளராக கியூபாவில் திருத்தூதுப் பயணம்


ஜூன்,30,2015. வருகிற செப்டம்பர் 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கியூபாவுக்கு மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணத்தையொட்டி செய்தி வெளியிட்டுள்ளனர் கியூப கத்தோலிக்க ஆயர்கள்.

அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கும், கியூபாவுக்கும் இடையே ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகள் நிலவி வந்த பதட்டநிலைகள் முடிவுற்ற நம்பிக்கையை அளிக்கும் இக்காலத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கியூபாவுக்கு மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணம், கியூபத் திருஅவைக்கு மகிழ்வளிக்கக்கூடியதாக உள்ளது என்று அச்செய்தி கூறுகிறது.

அகிலத் திருஅவையின் தலைவர், மக்களுக்கு இடையே ஒப்புரவு மற்றும் அமைதியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாக இத்திருத்தூதுப் பயணம் உள்ளது என்றும் கியூப ஆயர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

17 ஆண்டுகளுக்குப் பின்னர், மூன்றாவது திருத்தந்தையாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கியூபாவுக்கு வருகை தருகிறார் என்றும், உலகில் கியூபா, பிரேசில் ஆகிய இரு நாடுகள் மட்டுமே மூன்று திருத்தந்தையர்கள் திருத்தூதுப் பயணம் மேற்கொண்ட சலுகையைப் பெற்றுள்ளன என்றும் அச்செய்தி கூறுகிறது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவனின் கருணையின் மறைப்பணியாளராக கியூபாவில் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வார் என்றும், இதற்காக, செப்டம்பர் 17க்கும், 18க்கும் இடைப்பட்ட இரவில் திருவிழிப்பு திருவழிபாடு நடைபெறும் என்றும் கியூப ஆயர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.