2015-07-02 15:34:00

கிரேக்க நாட்டுடன் திருத்தந்தை பிரான்சிஸ் ஒருமைப்பாட்டுணர்வு


ஜூலை,02,2015. கிரேக்க நாடு, முப்பதாயிரம் கோடி டாலருக்கு மேற்பட்ட வெளிநாட்டுக் கடனை குறிப்பிட்ட தவணைக்குள் செலுத்த முடியாது என்று இப்புதனன்று அறிவித்துள்ளவேளை, நெருக்கடி நிலையிலுள்ள அந்நாட்டுக்காகச் செபிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கிரேக்க நாட்டின் பொருளாதார மற்றும் சமூகச் சூழல் கவலையளிப்பதாகவும், அன்புக்குரிய கிரேக்க மக்களின் நன்மைக்காக விசுவாசிகள் அனைவரும் ஒன்றிணைந்து செபிக்குமாறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுள்ளதாக, திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் இயேசு சபை அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி அவர்கள் இப்புதனன்று கூறினார்.

எந்த ஒரு அரசியல் மற்றும் சட்ட நுணுக்கம் சார்ந்த விவாதத்திலும், பொறுப்பான தீர்மானங்கள் எடுப்பதிலும், மனித மாண்பு எப்போதும் மையமாக வைக்கப்பட வேண்டுமெனவும், கிரேக்க நாட்டு நெருக்கடி நிலை குறித்த அறிக்கையில் வலியுறுத்தினார் அருள்பணி லொம்பார்தி.

கிரேக்க நாடு, IMF பன்னாட்டு நிதியத்திற்குச் செலுத்த வேண்டிய ஏறக்குறைய 18 இலட்சம் டாலர் கடன் தொகையின் காலக்கெடு ஜூன் 30, இச்செவ்வாயன்று நிறைவுற்றது. மேலும், கிரேக்க நாடு, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இரஷ்யா மற்றும் சீனாவுடன் கிரேக்க நாடு நெருங்கிச் செயல்படுவதோடு நேட்டோ அமைப்பிலிருந்து விலகும் நிலையும் ஏற்படவுள்ளது.

கிரேக்க நாடு, தனது வெளிநாட்டுக் கடன் தொகையைச் செலுத்துவதற்கு ஈராண்டு திட்டம் ஒன்றை அறிவித்திருந்தபோதிலும், அதை ஏற்பதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மறுத்துள்ளன.

இதற்கிடையே, கிரேக்க நாடு ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து இருப்பதா, வேண்டாமா என்பது குறித்த பொதுமக்கள் கருத்து வாக்கெடுப்பு வருகிற ஞாயிறன்று இடம்பெறவுள்ளது. ஜெர்மனி போன்ற நாடுகள் இதன் முடிவுக்காகக் காத்திருக்கின்றன. 

கிரேக்கம் அதன் ஐந்தாண்டு கால கடன் நெருக்கடியில், முதல்தடவையாக எந்தவிதமான பன்னாட்டு நிதியுதவிகளையும் பெறமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. IMF நிதியத்துக்குச் செலுத்த வேண்டிய கடன்தொகையை கிரேக்கம் செலுத்தத் தவறிய நிலையிலேயே நிதியுதவிகள் தடைப்பட்டுள்ளன.

ஜெர்மனி 682 கோடி டாலர், பிரான்ஸ் 438 கோடி டாலர், இத்தாலி 384 கோடி டாலர்.. இப்படி பல ஐரோப்பிய நாடுகள் கிரேக்கத்துக்குக் கடன் வழங்கியுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.