2015-07-03 14:51:00

இத்தாலியில் வேளாண் தொழிலில் பயன்படுத்தப்படும் வெளிநாட்டவர்


ஜூலை,03,2015. வறுமை மற்றும் கலவரங்கள் காரணாக குடிமக்கள் வெளியேறும் நாடுகள், குறிப்பாக, புர்க்கினோ ஃபாசோ, மாலி, காம்பியா, கானா போன்ற ஆப்ரிக்க நாடுகள் மனித வர்த்தகத்திற்கும், மக்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கும் எதிரான கொள்கைகளை அமைக்க வேண்டியது இன்றியமையாதது என்று இத்தாலிய காரித்தாஸ் நிறுவனம் கூறியுள்ளது.

இத்தாலியின் மிலானில் நடைபெற்றுவரும் எக்ஸ்போ 2015 நிகழ்வில் இவ்வியாழனன்று இவ்வாறு கேட்டுக்கொண்ட இத்தாலிய காரித்தாஸ் நிறுவனம், இத்தாலியில் வெளிநாட்டுக் குடியேற்றதாரர்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்த விபரங்களை வெளியிட்டது.

இத்தாலியின் பத்து மறைமாவட்டங்களில் ஓராண்டில் மட்டும் விவசாய நிலப் பகுதிகளில் தவறாகப் பயன்படுத்தப்படும் இரண்டாயிரம் வெளிநாட்டுத் தொழிலாளர்களைத் தனது நிறுவன உறுப்பினர்கள் சந்தித்து விபரங்களைக் கண்டறிந்ததாகவும் தெரிவித்தது இத்தாலிய காரித்தாஸ்.

ஆனால் இவ்வாறு பயன்படுத்தப்படும் தொழிலாளர்களின் உண்மையான எண்ணிக்கை பல்லாயிரக்கணக்கில் இருக்கலாம் என்றும் கூறிய காரித்தாஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகள், இத்தொழிலாளர்களில் மூன்று பேரில் இருவர், பாழடைந்த குடிசைகளிலும், கூரையின்றி பொது இடங்களிலும் வாழ்கின்றனர் என்று கூறினர்.

இவர்கள் 25 யூரோக்கள் வீதம் ஊதியம் பெறுகின்றனர், ஆயினும், ருமேனியா பல்கேரியா மற்றும் பிற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து வரும் தொழிலாளர்களால் போட்டிகள் அதிகரிப்பதால் இந்த ஊதியமும் குறைகின்றது, புர்க்கினோ ஃபாசோ, மாலி, காம்பியா, கானா போன்ற ஆப்ரிக்க நாடுகளின் குடியேற்றதாரர்கள் தொழிலில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றனர் என்றும் இத்தாலிய காரித்தாஸ் கூறியது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.