2015-07-03 14:34:00

இறைவா உமக்கே புகழ் புதிய திருமடல் பற்றி கர்தினால் பரோலின்


ஜூலை,03,2015. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ‘இறைவா உமக்கே புகழ்’(Laudato si') புதிய திருமடல், நடப்பு ஆண்டிலும், அதற்குப் பின்னரும் நடைபெறவிருக்கும் உலகளாவிய நிகழ்வுகளுக்கு, திருஅவைக்கும் உலகுக்கும் மிகவும் முக்கியமானது என்று வத்திக்கான் கருத்தரங்கு ஒன்றில் கூறினார் திருப்பீடச் செயலர்.

"முதலில் மக்களும் பூமிக்கோளும் : தவிர்க்க இயலாத மாற்றத்திற்கான தேவை" என்ற தலைப்பில் இவ்வியாழனும், இவ்வெள்ளியும் உரோம் நகரில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கில் உரையாற்றிய திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், இறைவா உமக்கே புகழ் திருமடல் வலியுறுத்தும் முக்கிய கூறுகளை விளக்கினார். 

திருப்பீட நீதி மற்றும் அமைதி அவையும், CIDSE என்ற வளர்ச்சிக்கான அனைத்துலக கத்தோலிக்க அரசு-சாரா அமைப்பும் இணைந்து நடத்திய இந்த இரண்டு நாள் கருத்தரங்கில், அரசியல், சமய மற்றும் பொதுத் துறைகளைச் சேர்ந்த ஏறக்குறைய 200 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

அனைத்துலக அளவில், தேசிய அளவில், உள்ளூர் அளவில் என, மூன்று மட்டங்களில் புரிந்து செயல்படுவதற்கும், கத்தோலிக்கத் திருஅவைக்கும் ‘இறைவா உமக்கே புகழ்’திருமடல் எவ்வாறு உதவுகின்றது என்பதையும் எடுத்துச் சொன்னார் கர்தினால் பரோலின்.

இம்மாதம் 13 முதல் 16ம் தேதி வரை Addis Ababaவில் நடைபெறவிருக்கும், வளர்ச்சிக்கான நிதி குறித்த 3வது அனைத்துலக கருத்தரங்கு, வருகிற செப்டம்பர் 25 முதல் 27ம் தேதி வரை நியுயார்க்கில் நடைபெறவிருக்கும் 2015ம் ஆண்டுக்குப் பின்னான ஐ.நா. வளர்ச்சித்திட்ட இலக்குகள் உச்சி மாநாடு, வருகிற நவம்பர் 30 முதல் டிசம்பர் 11ம் தேதி வரை பாரிசில் நடைபெறவிருக்கும் காலநிலை மாற்றம் குறித்த ஐ.நா. மாநாடு போன்றவற்றில் இத்திருமடல் சில நேர்மறைத் தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும் கூறினார் கர்தினால் பரோலின்.

மேலும், ‘இறைவா உமக்கே புகழ்’(Laudato si') புதிய திருமடலைப் பார்வையற்றவர் வாசிப்பதற்கென அது பிரெய்ல் எழுத்தில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இம்முயற்சியில்  வத்திக்கான் புத்தக வெளியீட்டு நிறுவனமும், அனைத்துலக பார்வையற்றோர் அமைப்பும் ஈடுபட்டுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.