2015-07-03 15:03:00

குழந்தை மற்றும் கட்டாயத் திருமணத்துக்கு ஐ.நா. தடை


ஜூலை,03,2015. குழந்தை மற்றும் கட்டாயத் திருமணங்கள் நடத்துவது மனித உரிமை மீறல்கள் என்று சொல்லி, அவற்றை நிறுத்துவதற்கு ஐ.நா. மனித உரிமைகள் அவை அழைப்பு விடுத்திருப்பதை வரவேற்றுள்ளனர் மனித உரிமை ஆர்வலர்கள்.

குழந்தை மற்றும் கட்டாயத் திருமணங்கள் உலகின் நிலையான வளர்ச்சிக்குத் தடையாக இருந்து வறுமையை நிரந்தரமாக்குகின்றன என்று இவ்வியாழனன்று ஐ.நா. மனித உரிமைகள் அவை கூறியது.

இத்தகைய திருமணப் பழக்கங்களை ஒழிப்பதற்கு நாடுகளில் தேசிய அளவில் செயல்திட்டங்கள் அவசியம் எனக் கூறிய ஐ.நா. அவை, பெண்களும், சிறுமிகளும் தங்களின் பாலியல் வாழ்வு பற்றிச் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் தீர்மானம் எடுப்பதை அரசுகள் உறுதி செய்ய வேண்டுமெனக் கேட்டுள்ளது.

குழந்தைத் திருமணங்களைத் தடுப்பதற்கு நாடுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால்,  2050ம் ஆண்டுக்குள் 120 கோடிச் சிறுமிகள் திருமணம் செய்து வைக்கப்பட்டிருப்பார்கள் என்று, சிறுமிகள் மணப்பெண்கள் அல்ல என்ற அமைப்பின் இயக்குனர் இலட்சுமி சுந்தரம் அவர்கள் கூறினார்.

குழந்தைத் திருமணத்தால் ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய ஒரு கோடியே ஐம்பது இலட்சம் சிறுமிகள் பாதிக்கப்படுகின்றனர்.

ஐ.நா.வின் இத்தீர்மானத்திர்கு 85க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. 

ஆதாரம் : Reuters / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.