2015-07-03 15:22:00

நாசா திட்டத்தில் செவ்வாய்க் கோளில் பறக்கும் விமானம்


ஜூலை,03,2015. செவ்வாய்க் கோளின் வானில் பறப்பதற்கான விமானத்தை அமெரிக்க ஐக்கிய நாட்டு நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் அறிவியலாளர்கள் உருவாக்கி வருகின்றனர்.

“Prandtl-m” எனப் பெயரிடப்பட்ட அந்த விமானத்தை, இந்த ஆண்டுக்குள் சோதித்துப் பார்க்க அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

எதிர்காலத்தில், செவ்வாய்க் கோளில் மனிதர்களை ஏற்றிச் செல்லும் விண்கலன்கள் தரையிறங்குவதற்காக அறிவியலாளர்கள் நினைத்துள்ள இடங்கள், அதற்கு ஏற்றவைதானா என்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள, அந்தக் கோளின் மீது பறந்து செல்லக்கூடிய விமானத்தை நாசா வடிவமைத்து வருகிறது என்று நாசா அறிவியலாளர்கள் தெரிவித்தனர்.

செவ்வாய்க் கோளுக்கு அனுப்பப்படும் விண்கலன், இந்த விமானத்தை தன்னுடன் எடுத்துச் செல்லும்.

அங்கு செவ்வாய்க் கோள் பரப்புக்கு 2,000 அடி உயரத்தில் விண்கலனிலிருந்து இந்த விமானம் விடுவிக்கப்படும். அதனைத் தொடர்ந்து செவ்வாயின் வானில் அந்த விமானம் 32 மைல்கள் வரை பறந்து சென்று ஆய்வுகள் மேற்கொள்ளும். இந்த விமானத்தின் மாதிரித் தயாரிப்பு, இந்த ஆண்டுக்குள் சோதித்துப் பார்க்கப்படும்.

பூமிக்கு ஒரு இலட்சம் அடி உயரத்தில், பலூன் ஒன்றிலிருந்து இந்த விமானம் சோதனை முறையில் பறக்க விடப்படும். அந்த உயரத்தில்தான், செவ்வாய்க் கோளின் வானத்தைப் போன்ற சூழல் நிலவுகிறது. பிற விமானங்களால் செயல்பட முடியாத அந்தச் சூழலில் மாதிரி விமானம் செயல்பட்டால், “Prandtl-m” விமானத்தின் உருவாக்கம் அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்லப்படும் என்று நாசா அதிகாரிகள் கூறினர்.

ஆதாரம் : தினமணி / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.