2015-07-25 16:05:00

அமெரிக்க கர்தினால் Baum மறைவு, திருத்தந்தை இரங்கல் செய்தி


ஜூலை,25,2015. அமெரிக்க ஐக்கிய நாட்டுக் கர்தினால் William Wakefield Baum அவர்கள் உயிரிழந்ததை முன்னிட்டு தனது அனுதாபங்களைத் தெரிவிக்கும் இரங்கல் தந்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வாஷிங்டன் கர்தினால் Donald Wuerl அவர்களுக்கு இரங்கல் தந்தி அனுப்பியுள்ள திருத்தந்தை, மறைந்த கர்தினால் William Wakefield Baum அவர்கள், அமெரிக்கத் தலத்திருஅவைக்கும், திருப்பீடத்தில் கத்தோலிக்க கல்வி பேராயம் மற்றும் வத்திக்கானின் பாவமன்னிப்புச் சலுகை நிறுவனத்திற்கு ஆற்றியுள்ள பணிகளுக்குப் பாராட்டும் நன்றியும் தெரிவித்துள்ளார். அதோடு, அவரின் ஆன்மா நிறைசாந்தியடையச் செபிப்பதாகவும் திருத்தந்தை தெரிவித்துள்ளார்.

நீண்ட காலமாக உடல்நலம் குன்றியிருந்த 88 வயதாகும் கர்தினால் William Wakefield Baum அவர்கள், ஏழைச் சகோதரிகள் சபை இல்லத்தில் இவ்வெள்ளியன்று மரணமடைந்தார்.

கர்தினால் William Wakefield Baum அவர்கள், தனது 49 வது வயதில் 1976ம் ஆண்டு மே 24ம் தேதி அருளாளர் திருத்தந்தை 6ம் பவுல் அவர்களால் கர்தினாலாக உயர்த்தப்பட்டார். 39 ஆண்டுகள் கர்தினாலாக இருந்துள்ள இவர், 1980ம் ஆண்டில் கத்தோலிக்க கல்வி பேராயத் தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர் 1990ம் ஆண்டில் Apostolic Penitentiary எனப்படும் வத்திக்கானின் பாவமன்னிப்புச் சலுகை நீதிமன்றத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.  2001ம் ஆண்டில் பணி ஓய்வு பெறும்வரை அப்பணியில் இருந்தார் மறைந்த கர்தினால் Baum.  

கர்தினால் Baum அவர்களின் இறப்போடு திருஅவையில் மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை 220 ஆகவும், இவர்களில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய 80 வயதுக்குட்பட்ட கர்தினால்களின் எண்ணிக்கை 120 ஆகவும் மாறியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.