2015-07-27 15:30:00

சிரியாவில் கடத்தப்பட்ட அருள்பணியாளர்க்கு திருத்தந்தை செபம்


ஜூலை,27,2015. சிரியாவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கடத்தப்பட்ட இயேசு சபை அருள்பணியாளர் Paolo Dall’Oglio அவர்கள் விடுதலை செய்யப்படுமாறு இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மிகவும் மதிக்கத்தக்க அருள்பணியாளர் Dall’Oglio அவர்கள் விடுதலை செய்யப்படுமாறு மிகவும் உருக்கமாக கேட்டுக்கொள்வதாக தெரிவித்த திருத்தந்தை, இந்த அருள்பணியாளர் மற்றும் சிரியாவில் கடத்தப்பட்டுள்ள ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபை ஆயர்களுக்காக, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களோடு சேர்ந்து அன்னைமரியிடம் செபித்தார்.

முப்பது ஆண்டுகளாக சிரியாவில் மறைப்பணியாற்றிவந்த இத்தாலிய இயேசு சபை அருள்பணியாளர் Paolo Dall’Oglio அவர்கள், 2013ம் ஆண்டு, ஜூலை 29ம் தேதி கடத்தப்பட்டார்.

மேலும், அந்தியோக் ஆர்த்தடாக்ஸ் சபையின் ஆயர் Boulos Yazigi, சிரியன் ஆர்த்தடாக்ஸ் சபையின் ஆயர் Mar Gregorios Youhanna Ibrahim ஆகிய இருவரும் அலெப்போ நகருக்கு அருகில் 2013ம் ஆண்டு ஏப்ரலில் கடத்தப்பட்டனர்.

சிரியாவில் போர் இடம்பெறும் பகுதிகளில் கடத்தப்பட்டுள்ள இவ்விரு ஆயர்கள் மற்றும் பலரையும் என்னால் மறக்க இயலாது எனவும், கடத்தப்பட்டுள்ள அனைவரின் விடுதலைக்குப் பொறுப்பான உள்ளூர் மற்றும் பன்னாட்டு அதிகாரிகள் இவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவதற்கு ஆவன செய்வார்கள் என்று தான் நம்புவதாகவும் குறிப்பிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.