2015-07-27 15:15:00

திருத்தந்தை -இறைவனுக்கான நம் பசியை இயேசு திருப்தி செய்கிறார்


ஜூலை,27,2015. இயேசு கிறிஸ்து அப்பங்களைப் பலுகச் செய்த புதுமை, பசித்திருக்கும் மனிதருக்கு வாழ்வின் முழுமையை அவர் வழங்குவதைக் காட்டுகின்றது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இஞ்ஞாயிறன்று கூறினார்.

இயேசு அப்பங்களைப் பகிர்ந்தளித்த புதுமை குறித்த இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, ஒவ்வொருவரும் தங்களிடம் குறைவாக இருப்பதையும் இறைவனுக்கு அர்ப்பணிக்குமாறு ஊக்குவித்தார். இதன் வழியாக, ஒவ்வொருவரின் திறமைகளையும், நற்செயல்களையும் இறைவன் பலுகச் செய்வார் என்றும் கூறினார் திருத்தந்தை.

வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கொளுத்தும் வெயிலில் நின்றுகொண்டிருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகளிடம் இவ்வாறு உரைத்த திருத்தந்தை, இயேசு நம் உடல்பசியை மட்டுமல்ல, அதைவிட இன்னும் மிக ஆழமான பசிகளை, வாழ்விற்குப் பொருள் தேடும் பசியை, இறைவனுக்கான பசியை திருப்தி செய்கிறார் என்றும் கூறினார்.

இறைவனின் வல்லமைமிக்க கருணை இயேசுவில் செயலாற்றுகின்றது மற்றும் இறைவனின் கருணை எல்லாத் தீமைகளிலிருந்தும் குணமாக்குகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இப்புதுமை, இயேசுவின் இறுதி இரவு உணவுக்கு முன்னோடியாக இருந்தது என்றும், இயேசுவே இறைவனின் உணவு என்றும் உரையாற்றிய திருத்தந்தை, இயேசுவோடு நாம் ஒன்றித்திருக்கும்போது, அவரின் வாழ்வை நம்மில் பெறுகிறோம் மற்றும் வானகத்தந்தையின் பிள்ளைகளாகவும், நாம் ஒருவர் ஒருவருடன் சகோதரர்களாகவும் மாறுகிறோம் என்றும் கூறினார்.

திருநற்கருணையில் பங்குகொள்வது, இயேசுவின் பகிர்தலிலும், கைம்மாறுகருதாத பண்பிலும் நுழைகிறோம், கிறிஸ்தவர்கள், தங்களிடம் இருப்பதைப் பகிர்வதற்கு இது  தூண்டுகின்றது என்றும் உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

"நாம் ஏழைகளாக இருந்தாலும்கூட, எதையாவது நாம் பிறருக்குக் கொடுக்க முடியும். நம் மத்தியில் பலர், துன்பங்கள், தனிமை மற்றும் ஏழ்மையை அனுபவிக்கின்றனர். அவர்களுக்கு நாம் என்ன செய்கிறோம்? துன்பங்களும், வறுமையும், தனிமைத் துன்பமும் வாட்டுகின்றனவே என்று புகார் சொல்லிக்கொண்டே இருப்பதால் பிரச்சனைகளைத் தீர்க்க இயலாது. ஆனால், நம்மிடம் குறைவாக இருந்தாலும், அவற்றை அளிக்கலாம். நிச்சயமாக, நம்மிடம், சிலமணி நேரங்கள், சில திறமைகள், சில சிறப்புப் பண்புகள் இருக்கின்றன, நம் மத்தியில் 5 அப்பங்களும் 2 மீன்களுமாகிய இவை இல்லாமல் இருப்பவர் யார்? அவற்றை இறைவன் கரங்களில் வைப்பதற்கு நாம் விருப்பம் காட்டினால், இந்த உலகில் இன்னும் கொஞ்சம் அன்பைக் கொண்டு வரலாம். இவ்வுலகில் இன்னும் கொஞ்சம் அன்பு, அமைதி, நீதி மற்றும் மகிழ்வைக் கொண்டு வரலாம். நம் ஒருமைப்பாட்டுணர்வின் சிறிய அடையாளங்களை இறைவனால் பலுகச் செய்ய இயலும். அதன் வழியாக அவரின் கொடைகளில் பங்குதாரர்களாகவும் நம்மை ஆக்க முடியும்" என்றும் உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.