2015-07-27 15:56:00

நீதி கிடைக்காதவரை உண்மையான ஒப்புரவுக்கு இடமில்லை


ஜூலை,27,2015. இலங்கையில் இடம்பெற்ற போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்காதவரை நாட்டில் உண்மையான ஒப்புரவை எட்ட முடியாது என்று அந்நாட்டு அருள்பணியாளர் ஒருவர் கூறினார்.

இலங்கையில் சிங்கள மற்றும் தமிழ் மக்களுக்கு இடையே ஒப்புரவை ஏற்படுத்துவதற்கு இலங்கையின் தற்போதைய அரசு புதிய அணுகுமுறையைக் கையாளப்போவதாக உறுதி அளித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த, கொழும்பு நகரை மையமாகக் கொண்டு செயல்படும் கிறிஸ்தவ ஒருமைப்பாட்டு இயக்கத்தின் தலைவரான அருள்பணியாளர் எம்.சக்திவேல் அவர்கள், நாட்டில் ஒப்புரவை ஏற்படுத்துவதற்கு முன்னர், உண்மையான நீதி நிலவ வழி அமைக்க வேண்டும் என்று கூறினார்.

தமிழ்க் குடும்பங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை, இந்நிலையில், நாட்டில் நிலையான அமைதிக்கான ஒப்புரவில் எப்படி நம்பிக்கை வைக்க முடியும் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார் அருள்பணி எம்.சக்திவேல்.

இலங்கையில் போர் தொடங்கி 32 ஆண்டுகள் கடந்து விட்டன, ஆனால் இனப்பாகுபாடு இன்னும் தொடர்கின்றது, அரசியல்வாதிகள், சிங்கள புத்தமத தேசியவாதக் குழுவான Bodu Bala Sena போன்ற தீவிரவாதக் குழுக்களை கருவியாகப் பயன்படுத்துகின்றனர் என்றும் கருத்து தெரிவித்தார் அருள்பணி எம்.சக்திவேல்.

மேலும், ஜூலை 24ம் தேதி இலங்கையில் கறுப்பு ஜூலை கடைப்பிடிக்கப்பட்டது. 

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.