2015-07-27 16:18:00

மலேரியாவுக்குப் புதிய தடுப்பூசி மஸ்கியூரிக்ஸ்


ஜூலை,27,2015. ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இறப்பதற்கு காரணமாகும் மலேரியா நோய்க்கு, பதிய தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

GlaxoSmithKline இங்கிலாந்து மருந்து தயாரிப்பு நிறுவனம், மலேரியா நோய்க்கிருமிகளை எதிர்த்து அழிக்கும் மஸ்கியூரிக்ஸ் (Mosquirix) என்ற புதிய தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளது. இப்புதிய மருந்து மூலம், ஆப்ரிக்காவில் இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வைக் காப்பாற்ற முடியும் எனக் கூறப்பட்டுள்ளது. பில்கேட்ஸ், மெலின்டா கேட்ஸ் அறக்கட்டளையின் நிதியுதவியுடன் உருவாக்கப்பட்ட இத்தடுப்பூசியை, ஐரோப்பிய ஒன்றியத்தின் மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியம் அங்கீகரித்துள்ளது. "மஸ்கியூரிக்ஸ்' மருந்துகளை அதிகஅளவில் கொள்முதல் செய்து. உலகின் பல நாடுகளுக்கும் அனுப்புவது பற்றிய திட்ட அறிக்கையை, உலக நலவாழ்வு  நிறுவனம் விரைவில் மேற்கொள்ளவுள்ளது.

மலேரியா நோய் தடுத்து நிறுத்தக் கூடியது மற்றும் சிகிச்சை பெறத்தக்கது என்ற நிலையிலும், உலகில் 2013ம் ஆண்டில் மலேரியாவால் 5,84,000 பேர் இறந்துள்ளனர்.  இவர்களில் 98 விழுக்காடு ஆப்ரிக்காவின் சகாராவையடுத்த பகுதிகளில் இடம்பெற்றுள்ளது. இதில் 83 விழுக்காட்டினர் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள்.

ஆதாரம் : Agencies/தினமலர் / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.