2015-07-28 15:19:00

கலாம் அவர்களின் மறைவுக்கு இந்திய கத்தோலிக்கர் இரங்கல்


ஜூலை,28,2015. இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களின் மறைவுக்கு இந்திய கத்தோலிக்கரின் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார் கர்தினால் பசிலியோஸ் கிளீமிஸ்.

இந்திய ஆயர் பேரவைத் தலைவரான கர்தினால் கிளீமிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அப்துல் கலாம் அவர்கள், சிறந்த அறிவியல் மேதை, நல்ல மனிதர், எளிமையானவர், நேர்மையானவர், குழந்தைகளை, இளையோரை, மாணவர்களை அன்புகூர்ந்து அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்தவர், கவிஞர், புத்தகங்கள் எழுதுபவர், இவரது மறைவு நாட்டுக்கு ஈடு செய்ய முடியாது இழப்பு என்றெல்லாம் பாராட்டியுள்ளார்.

ஜூலை 27, இச்செவ்வாய் மாலை மாரடைப்பால் மரணமடைந்த கலாம் அவர்களின் உடல், டெல்லியில் ராஜாஜி மார்க் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. தலைவர்களும், பொதுமக்களும் அவரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்தியாவின் 11வது குடியரசு தலைவரான அப்துல் கலாம் அவர்களின் உடல் டெல்லியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு இப்புதன்கிழமை மதியம் 1 மணியளவில் கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படும். பின்னர் ஜூலை 30 வியாழக்கிழமை இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் தன்னம்பிக்கையை விதைத்த மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் உடலை நல்லடக்கம் செய்ய, ராமேஸ்வரம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பேய்க்கரும்பு கிராமத்தில் 1.85 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அப்துல் கலாம் அவர்கள் குடும்பத்தினரின் விருப்பத்தின்பேரில் அவரது உடல் இங்கு அடக்கம் செய்யப்படவுள்ளது.

மேகாலய தலைநகர் ஷில்லாங்கில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தில் இத்திங்கள் கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலாம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அங்கு இத்திங்கள் மாலை 6.30 மணி அளவில் அவர் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அருகில் உள்ள பெத்தனி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மத்திய அரசு சார்பில் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2 வரை 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இருப்பினும் விடுமுறை ஏதும் இல்லை என அரசு அறிவித்துள்ளது. 7 நாட்களும் அரசு அலுவலகங்களில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என மத்திய அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : Ind.Section/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.